ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அமைச்சர்களுடன் சந்திப்பு
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அமைச்சர்களுடன் சந்திப்பு
UPDATED : ஆக 10, 2023 12:00 AM
ADDED : ஆக 10, 2023 09:55 AM
சென்னை:
ஊதிய முரண்பாடு பிரச்னைகளை தீர்க்க கோரி நேற்று, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசை, டிட்டோ ஜாக் ஆசிரியர் சங்கத்தினர் சந்தித்து மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:
பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதி தேர்வு தேவை என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். இவ்வாறு, 28 வகை கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்றுள்ளன.தமிழ்நாடு அனைத்து சிறப்பாசிரியர்கள் சங்க மாநில தலைவர் பாபு மற்றும் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் முருகதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷை சந்தித்து மனு அளித்தனர். அதில், அரசு பள்ளிகளில் 12 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வை வழங்க வேண்டும். தாமதமின்றி பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது, பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என, அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளதாக, ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
