UPDATED : ஆக 12, 2023 12:00 AM
ADDED : ஆக 12, 2023 04:12 PM
பொள்ளாச்சி:
அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை, வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்திற்கு, இம்மாதத்தில் இருந்து, வினாடி-வினா போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில் உள்ள ஹைடெக் ஆய்வகத்தில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வகுப்பு ஆசிரியர்களே வினாத்தாள் தயாரித்து, வினாடி-வினா போட்டி நடத்துவர். அதிக மதிப்பெண் பெறுவோர் தேர்வு செய்யப்பட்டு, வட்டாரம், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படும். பின், மாநில அளவில் தகுதி பெற்றவர்கள், வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு, விமானத்தில் அழைத்து செல்லப்படுவர். நடப்பு கல்வியாண்டுக்கான போட்டி, வரும் 16ம் தேதி முதல் பள்ளிகளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தலைமையாசிரியர்கள் கூறுகையில், மாணவர்களுக்கு, வகுப்பு ஆசிரியர்களே வினாத்தாள் தயாரித்து, கம்ப்யூட்டரில் பதிவேற்றுவர். பதில் அளித்து சமர்பித்ததும், தவறான வினாக்களுக்கான விடை திரையில் தோன்றும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண், அவர்களுக்கான எமிஸ் எண்ணில் பதிவாகிவிடும். வினாத்தாள்களை பதிவேற்றுவதில் உள்ள சந்தேகங்களுக்கு தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளதால், இனி மாதந்தோறும் வினாடி-வினா போட்டி நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றனர்.
