UPDATED : ஆக 13, 2023 12:00 AM
ADDED : ஆக 13, 2023 05:59 PM
கடம்பத்துார்:
திருவள்ளூர் மாவட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 5.26 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படும் ஊரக நுாலகங்களில், 400க்கும் மேற்பட்ட நுாலகர் பணியிடம் காலியாக உள்ளதால், அவை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் 2006-11ம் ஆண்டு வரை, 526 ஊரக நுாலகங்கள் துவக்கப்பட்டன. இந்நுாலகங்கள் 10 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததால், பயன்பாடில்லாமல் பூட்டியே கிடந்தது. இதனால், அக்கட்டடங்கள் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து, தற்போது தமிழக அரசு, அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட நுாலகங்களை, மூன்றில் ஒரு பங்காக பிரித்து, பராமரிப்பு இல்லாத நுாலகங்களை மூன்று ஆண்டுகளில் சீரமைக்க உத்தரவிட்டது. மேலும், அலமாரி, மேஜை போன்ற அடிப்படை தேவைகளுக்காக ஒவ்வொரு நுாலகத்திற்கும், 25,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு நுாலகத்திற்கும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், அங்கு தரமான செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களின் சந்தாக்களை பெறுவதை மாவட்ட கலெக்டர் உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் 526 நுாலகங்களில் தலா 1 லட்சம் வீதம், 5.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, 2021-22ம் ஆண்டு, 152 நுாலகங்கள் சீரமைக்கப்பட்டது. தற்போது, 2022-23 ம் ஆண்டில், 152 நுாலகங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள நுாலகங்கள், 2023-24ம் ஆண்டில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நுாலகங்கள் முறையாக சீரமைக்கப்பட்டு கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நுாலகம் இருந்தால், அவர்கள் பயன்படுத்தும் வகையில், &'துாய்மை பாரதம்&' திட்ட நிதியை பயன்படுத்தி, கூடுதல் கழிப்பறையும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட ஊரக நுாலகங்கள், நுாலகர்கள் இல்லாமல், பயன்பாட்டிற்கு வராமல், பூட்டியே கிடக்கிறது.இவ்வாறு பூட்டிக்கிடக்கும் நுாலகங்கள் சில இடங்களில் ரேஷன் கடையாகவும், அங்கன்வாடி மையமாகவும் செயல்பட்டு வருவது அக்கிராமவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, காலி பணியிடங்கள் குறித்து தகவல் அளிப்பதில் தயக்கம் காட்டுவதோடு, முறையான பதில் அளிக்கவும் மறுத்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஊரக நுாலகங்களை ஆய்வு செய்து, நுாலகர் பணியிடங்களை பூர்த்தி செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தந்த கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நுாலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் ஓய்வு பெற்ற அரசு நுாலகர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தனியார் துறை அலுவலர்களை கவுரவ நுாலகர்களாக பணியமர்த்தலாம். மேலும், பணியாளர்கள் இல்லையெனில், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமும் நுாலகத்தை செயல்படுத்தலாம்.நுாலகராக நியமிக்கப்படுவோர் ஊராட்சி மன்ற தலைவரின் பெற்றோர், கணவன், மனைவி, மகன், மகளாக இருக்கக் கூடாது. கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராகவும் இருக்கக் கூடாது. 58 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடையவராகவும், முன்னாள் இராணுவ வீரர்களாக இருப்பின், 50 வயது நிறைவு பெற்றவர்களாகவும், அக்கிராமத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என, ஒன்றிய அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
