இடைநிற்கும் மாணவர்களிடம் பணம் வசூல் குறை தீர் கூட்டத்தில் முறையீடு
இடைநிற்கும் மாணவர்களிடம் பணம் வசூல் குறை தீர் கூட்டத்தில் முறையீடு
UPDATED : ஆக 16, 2023 12:00 AM
ADDED : ஆக 16, 2023 09:27 AM
திண்டுக்கல்:
தாடிகொம்பு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தாததால் இடை நிற்கும் மாணவர்கள், கூடுதல் பணம் வசூலிக்கும் ஊராட்சி தலைவர் என்பன போன்ற பல்வேறு பிரச்னைகளுடன் திண்டுக்கல்லில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக 180 பேர் முறையிட்டனர். இக்கூட்டத்தில் பெறப்பட்ட தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழ் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதி உதவி, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை ஆணை, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் ஏழ்மை நிலை கிறிஸ்தவ மகளிர் சிறுதொழில் தொடங்கிட ரூ.10 லட்சம் உதவித்தொகை என ரூ.13 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., சேக்முகையதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத், மாவட்ட ஊராட்சி செயலர் கிரி உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கிழக்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி தலைவர் அன்பு ஹரிஹரன் அளித்த மனுவில்,தாடிகொம்பு உயர்நிலைப்பள்ளி 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேல்நிலை பள்ளிக்காக தாடிகொம்பு, சுற்றுப்பகுதி மாணவர்கள் திண்டுக்கல் செல்ல வேண்டி உள்ளதால் மேற்படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இதை கருதி தாடிகொம்பு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்திட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊராட் சி த லைவருக்கு எதிராக புகார்திண்டுக்கல் ஒன்றியம் அடியனுத்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் லாசர், விஜி வாணரசி அளித்த மனுவில், ஊராட்சி தலைவர் ஜீவானந்தம் புதிதாக வீடு கட்டுவோர், வரி செலுத்த வருவோர், குடிநீர் இணைப்புக்கு கூடுலாக பணம் வாங்கி வருகிறார். வணிக ரீதியான கட்டடங்கள் கட்ட 2000 சதுர அடிக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்க முடியும் நிலையில் 2400 சதுர அடிக்கு அனுமதி கொடுத்துள்ளார். வார்டு உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் கண்டுகொள்வதில்லை. கலெக்டர் தலையிட்டு கட்டுமான பணிகள், வணிக ரீதியான கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.கலெக்டர்
அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுப்பதற்காக தனியார் கல்லுாரி மாணவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக மாணவர்களுக்கு எவ்வித பயிற்சியும் அளிக்கப்படவில்லை. மாணவர்கள் எழுதிக்கொடுக்கும் மனுவில் எழுத்து பிழைகள் அதிகம் இருந்தன. வார்த்தைகள் பயன்படுத்தும் முறை, குறில், நெடில் இல்லாமல் இருந்தன. படிக்கத்தெரியாத பாமர மக்களும் அதை வாங்கிக்கொண்டு அலுவலர்களிடம் சென்றனர். முறையாக எழுதி கொடுக்கும் மனுக்கள் மீதே நடவடிக்கை இல்லாதபோது ,இது போன்ற எழுத்துப்பிழை ,வார்த்தைகள் முறையாக இல்லாத போது அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுக்க போகிறார்கள். மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் இருந்து சிரமப்பட்டு வரும் மக்களின் மனுக்கள், மாணவர்கள் எழுதிப்பழகுதற்காக இல்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உணர வேண்டும்.கலெக்டர் அலுவலகத்திற்கு குறைதீர் கூட்டத்திற்கு பல்வேறு பிரச்னைகள் காரணமாக மாற்றுத்திறனாளிகள் வருகின்றனர். இவர்கள் அலுவலகம் உள்ளே செல்வதற்கு ஒரே ஒரு சக்கரநாற்கலி தான் இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஒருவர் உள்ளே சென்று ,அது வரும் வரை மற்றவர்கள் வெளியேதான் காத்திருக்க வேண்டும். இதற்கென்று தனி நபர்கள் எவரும் இல்லை. பொதுமக்களே தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் நேற்று வந்த மாற்றுத்திறனாளிகள் தவழ்ந்து சென்றது பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இதை கருத்தில் கொண்டு கூடுதல் சக்கர நாற்காலிகள் ஏற்படுத்தி அதற்கென தனி நபரை நியமிக்க வேண்டும்.
