சிறப்பு அழைப்பாளராக 3ம் வகுப்பு மாணவன்! சுதந்திர தின கவுரவம்:
சிறப்பு அழைப்பாளராக 3ம் வகுப்பு மாணவன்! சுதந்திர தின கவுரவம்:
UPDATED : ஆக 16, 2023 12:00 AM
ADDED : ஆக 16, 2023 09:47 AM
சென்னை:
சுதந்திர தின விழாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, முதல்வருக்கு கடிதம் எழுதிய, மூன்றாம் வகுப்பு மாணவன் தன் தாயுடன், சிறப்பு அழைப்பாளராக விழாவில் பங்கேற்றான்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி; மனைவி ஆனந்தவள்ளி. விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களின் மகன் லிதர்சன், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவன் உட்பட ஆறு மாணவர்கள், தங்கள் ஆசிரியர் ஜோஸ்வாவிடம், சுதந்திர தின விழாவை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.இம்மாதம் 3ம் தேதி, தங்கள் ஆசிரியர் வழியாக, சுதந்திர தின விழாவை பார்க்க விரும்புவதாக கூறி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்களில் மாணவன் லிதர்சனுக்கு, பொதுத் துறை அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், சிறுவன் மற்றும் அவனது தாயை, அரசு செலவில் வட்டாரக் கல்வி அலுவலர் சண்முகம், சென்னைக்கு அழைத்து வந்தார். அவர்கள், அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர். சென்னையில் நேற்று காலை நடந்த, சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.இது குறித்து, சிறுவன் லிதர்சன் கூறுகையில், முதல் முறையாக சென்னை வந்துள்ளேன். சுதந்திர தின விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது, என்றான்.
