தேசிய கல்வி கொள்கை ரத்து; பசவராஜ் பொம்மை பாய்ச்சல்
தேசிய கல்வி கொள்கை ரத்து; பசவராஜ் பொம்மை பாய்ச்சல்
UPDATED : ஆக 16, 2023 12:00 AM
ADDED : ஆக 16, 2023 09:49 AM
பெங்களூரு:
அரசியல் ஆதாயங்களுக்காக தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்வது, மன்னிக்க முடியாத குற்றமாகும், என பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
நம் குழந்தைகளின் எதிர்காலத்தை புறக்கணித்து, அரசியல் ஆதாயத்துக்காக என்.சி.பி., எனும் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்வது மன்னிக்க முடியாத குற்றம். மாநில அரசு, தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சித்தராமையா கடந்த 2013 - 18 வரை முதல்வராக இருந்த போது, என்.சி.பி.,யை ஒப்புக் கொண்டார். கர்நாடகாவின் கல்வி கொள்கையை உருவாக்கிய கஸ்துாரி ரங்கன், நாடு முழுதும் என்.சி.பி.ஐ., உருவாக்கினார்.நாடு முழுதும் உள்ள அமைப்பு, மாநிலத்தில் இல்லை என்றால், நம் குழந்தைகள் எப்படி போட்டியிட முடியும். கிராமப்புற குழந்தைகளுக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும். குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை, வீணாக்க கூடாது. இல்லையெனில், பெற்றோர், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பா.ஜ., பெரிய இயக்கத்தை நடத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பா.ஜ., ஆட்சியில் நடந்த பணிகள் குறித்து ஆய்வு செய்வேன் என்றார். மூன்று மாதங்கள் கடந்த பின், எதுவும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால், மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதை பயன்படுத்தி, விசாரணை என்ற பெயரில் மாதக்கணக்கில் பேரம் பேசுவது எந்த வகையில் நியாயம். பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுபவர்கள், பேய்கள் என காங்கிரசின் கர்நாடக மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பேசியிருப்பது கண்டனத்துக்கு உரியது.இவ்வாறு அவர்கூறினார்.
