UPDATED : ஆக 18, 2023 12:00 AM
ADDED : ஆக 18, 2023 10:43 AM
பாகு:
உலக கோப்பை செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா. காலிறுதியில் சக வீரர் அர்ஜுனை வீழ்த்தினார். அஜர்பெய்ஜானில் உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. நாக் அவுட் முறையிலான இத்தொடரின் காலிறுதியில் இந்தியாவின் குகேஷ், விதித் தோல்வியடைந்தனர். மற்றொரு காலிறுதியில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, அர்ஜுன் மோதினர். 2 போட்டி கொண்ட இதில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற ஸ்கோர் 1.0–1.0 என ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி டை பிரேக்கருக்கு சென்றது. இதன் முதல் டை பிரேக்கரின் இரு போட்டி டிரா ஆனது. அடுத்த இரு போட்டியில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் மாறி மாறி வெற்றி பெற, ஸ்கோர் 3.0–3.0 என ஆனது. மூன்றாவது ‘டை பிரேக்கரின்’ முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். அடுத்து அர்ஜுன் வெற்றி பெற, மீண்டும் இருவரும் சமநிலை (4.0–4.0) அடைந்தனர்.அடுத்து சடன் டெத் முறையில் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில் வெள்ளை நிறகாய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 73வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 5.0–4.0 என வென்ற பிரக்ஞானந்தா, உலக கோப்பை செஸ் தொடரில் ஆனந்திற்குப் பின், அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் ஆனார். இதில் உலகின் நம்பர்–3 வீரர் பேபியானோ காருணாவை (அமெரிக்கா) சந்திக்கவுள்ளார். தவிர உலக செஸ் சாம்பியன்ஷிப் தகுதி போட்டியான கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார்.
