பத்தாயிரம் ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கும் ஈஷா
பத்தாயிரம் ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கும் ஈஷா
UPDATED : ஆக 18, 2023 12:00 AM
ADDED : ஆக 18, 2023 04:27 PM
தொண்டாமுத்தூர்:
ஈஷா யோகா மையம் சார்பில், 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பத்தாயிரம் ராணுவ வீரர்களுக்கு, ஹத யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.நாட்டின், 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படைப்பிரிவும், ஈஷாவும் இணைந்து, ராணுவ வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி வகுப்புகள், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி துவங்கப்பட்டது. மன அழுத்த மேம்பாட்டிற்கான யோகா மற்றும் முழுமையான நல்வாழ்வு என்ற தலைப்பில் நடக்கும் ஒரு வார யோகா பயிற்சி வகுப்பு, 9 மாநிலங்களில், 19 இடங்களில் நடக்கிறது.இதில் ஈஷா யோகா மையத்தில், 21 வாரம் தங்கி பயிற்சியை நிறைவு செய்த ஈஷா ஹத யோகா ஆசிரியர்கள் மூலம் 10,000 ராணுவ வீரர்களுக்கு, சூரிய கிரியா, அங்கமர்த்தனா உள்ளிட்ட யோகா கற்று கொடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக, சென்னை, பெங்களூரு, செகந்தராபாத், மும்பை, புனே, அகமதாபாத், குவாலியர், ஜான்சி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்ற யோகா வகுப்பு துவங்கியது. புனேவில் நடந்த நிகழ்ச்சியில், யோகா பயிற்சி வகுப்பை, தெற்கு பிராந்திய தரைப்படையின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அஜய்குமார் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு, செப்டம்பர் 1 முதல் 14ம் தேதி வரை, கோவை ஈஷா யோகா மையத்தில், யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.புனேவில் நடந்த நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.அதில் சத்குரு கூறுகையில், ராணுவ வீரர்களாகிய நீங்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் நல் வாழ்விற்கும் தேவையான செயல்களை செய்துள்ளீர்கள். இருப்பினும், உங்களுக்குள் மன ரீதியான மற்றும் சக்தி ரீதியான திறன்களை மேம்படுத்தும் விஷயத்தில் யோகாவும், அதன் உள்நிலை தொழில்நுட்பங்களும் அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த யோகா பயிற்சியில் நீங்கள் ஈடுபடும்போது, நீங்கள் யார் என்ற அடிப்படையே மாற்றம் பெறுவதை நீங்கள் பார்க்க முடியும். மனம் என்பது துன்பங்களை உருவாக்கும் இயந்திரம் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இது ஒரு அதிசயம். இந்த அதிசயத்தை நிகழ்த்தும் செயல்முறையில் யோகா உங்களுக்கு ஏராளமான நன்மைகளை தரும்.நீங்கள் தேசத்தை காக்கும் உன்னத பணிக்காக உங்கள் குடும்பங்களை பிரிந்து, உங்கள் உயிரையும் பணையம் வைத்து சேவையாற்றுகிறீர்கள். இப்பணியில் பல்வேறு விதமான அழுத்தங்கள் உள்ளன. எனவே, உங்கள் செயல் திறனிலும், வாழ்வை உணரும் அனுபவத்திலும், யோகா அளப்பரிய மாற்றத்தை உருவாக்கும், என்றார்.
