UPDATED : ஆக 22, 2023 12:00 AM
ADDED : ஆக 22, 2023 09:53 AM
பெங்களூரு:
சந்திரயான் - 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் - 3 லேண்டர் சாதனங்கள் இடையே, இருவழி தகவல் தொடர்பு நிறுவப்பட்டதாக, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, புரபல்ஷன் மாட்யூல் எனப்படும் உந்து கலத்தில் இருந்து, நிலவில் தரையிறங்க உள்ள, லேண்டர் சாதனம் கடந்த 17ம் தேதி பிரிந்து சென்றது. இது, நிலவில் நாளை மாலை 6:04 மணிக்கு தரை இறங்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் நேரலை ஒளிபரப்பு நாளை மாலை 5:20 மணி முதல் துவங்குகிறது.லேண்டர் தரை இறங்கியவுடன் அதன் உள்ளே இருந்து, ரோவர் வாகனம் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும். இந்நிலையில், 2019ல் ஏவப்பட்ட சந்திரயான் - 2 ஆர்பிட்டர் இப்போதும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இது ஏழு ஆண்டுகள் செயல்படும் திறன் உடையது. இந்த சந்திரயான் - 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் - 3 லேண்டர் சாதனம் இடையே இருவழி தகவல் தொடர்பு நேற்று வெற்றிகரமாக நிறுவப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.நல்வரவு நண்பா என்ற வரவேற்பு வாசகத்துடன் சந்திரயான் - 2 ஆர்பிட்டர், சந்திரயான் - 3 லேண்டர் சாதனத்தை வரவேற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதன் வாயிலாக, பெங்களூரு இஸ்ரோ அலுவலகத்தில் உள்ள, மாக்ஸ் எனப்படும், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து லேண்டர் சாதனத்துடனான இருவழி தகவல் தொடர்பை நிறுவ, அதிகப்படியான வழிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.
