டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு: மீண்டும் திருப்பி அனுப்பிய கவர்னர்
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு: மீண்டும் திருப்பி அனுப்பிய கவர்னர்
UPDATED : ஆக 22, 2023 12:00 AM
ADDED : ஆக 22, 2023 01:08 PM
சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை பரிந்துரை செய்து தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.மேலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பதவி மற்றும் 10 உறுப்பினர்களின் பதவிகள் பல மாதங்களாக காலியாக உள்ளன.இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும், இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் தராமல் ஒரு மாதமாக கவர்னர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவர் பதவி மற்றும் 10 உறுப்பினர்களின் பதவிகள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருக்கின்றன.அதில் தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் 10 உறுப்பினர்களின் பெயர்களையும் பரிந்துரை செய்து கவர்னருக்கு அனுப்பியுள்ளது. தமிழக அரசு அனுப்பி இருந்த பரிந்துரையின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக கவர்னர் ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருந்தார். கவர்னர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் பரிந்துரையை கவர்னர் மாளிகைக்கு அனுப்பிருந்தது. கடந்த ஒரு மாத காலமாக கிடப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த பட்டியலை கவர்னர் மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். மேலும் டிஎன்பிஎஸ்சி தலைவராக உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வுபெற வேண்டும், ஆனால் சைலேந்திர பாபுவுக்கு 61 வயதாகிவிட்டது, எனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
