புதிய மாநில கல்வி கொள்கை உருவாக்க அமைகிறது கமிட்டி
புதிய மாநில கல்வி கொள்கை உருவாக்க அமைகிறது கமிட்டி
UPDATED : ஆக 22, 2023 12:00 AM
ADDED : ஆக 22, 2023 11:44 AM
பெங்களூரு:
புதிதாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும். இதற்காக, வல்லுனர்கள் கமிட்டி அமைக்கப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.கர்நாடக அரசு நிர்வாகத்துக்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், உயர்கல்வி துறை மூத்த அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா தலைமையில், நேற்று பெங்களூரு விதான் சவுதாவில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. துணை முதல்வர் சிவகுமார், உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர், ஆரம்பகல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா, துறை கூடுதல் தலைமை செயலர் உமாசங்கர் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்துக்கு பின், சித்தராமையா கூறியதாவது:
புதிய தேசிய கல்வி கொள்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பழைய மாநில கல்வி கொள்கை தொடரும். புதிதாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும். இதற்காக வல்லுனர்கள் கமிட்டி அமைக்கப்படும். கல்வி கொள்கை மாநில அதிகார வரம்புக்கு உட்பட்டது. மாநிலங்களிடம் ஆலோசிக்காமல், மத்திய அரசு ஒரு தலைபட்சமாக உருவாக்கியது தவறு. பா.ஜ., ஆளும் மாநில அரசுகளே, தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து யோசிக்கிறது.கேரளா, தமிழக மாநிலங்களிலும் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படவில்லை. இதனால், ஏழை, எளியோர், எஸ்.சி., - எஸ்.டி.,யினர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
