பொது பாடத்திட்டம் தீங்கு விளைவிக்கும்: பாலகுருசாமி
பொது பாடத்திட்டம் தீங்கு விளைவிக்கும்: பாலகுருசாமி
UPDATED : ஆக 23, 2023 12:00 AM
ADDED : ஆக 23, 2023 04:36 PM
அனைத்து பல்கலையிலும் பொதுப் பாடத்திட்டம் என்பது ஒரு சர்வாதிகாரமான போக்கு மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல் என அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்து பல்கலையிலும் பொதுவான பாடத்திட்டம் என்பது சாத்தியப்படாத விஷயம். உயர்கல்விக்கான தமிழ்நாடு மாநில கவுன்சில் ன் இந்த அறிவிப்பு சர்வாதிகார போக்காக இருக்கிறது. இது தன்னாட்சி கல்லூரிகளின் மற்றும் பல்கலைகளின் செயல்பாடுகளை பாதிக்கும். 1986ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கவுன்சில், யுஜிசி ன் கைடுலைன்களை கல்வி நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை மேற்பார்வையிட மட்டுமே அதிகாரம் உண்டு. இது போன்ற புதிய திட்டங்களை திணிப்பதற்கு அதிகாரம் இல்லை.அனைத்து கல்லூரிகளிலும் பொதுவான பாடத்திட்டம் கொள்கை என்பது கல்லூரிகள் மற்றும் பல்கலைகளின் அடிப்படை கல்வி கொள்கைகளையும், கல்வி சுதந்திரத்தையும் பாதிக்கும். கல்வி அமைச்சர் உடனான சந்திப்பின் பொழுது இது குறித்து துணை வேந்தர்களோ, உறுப்பினர்களோ எந்த கேள்வியும், ஆட்சேபனையையும் எழுப்பாதது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் உள்ளது. இதனால் கல்லூரிகளுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டியையும், என்ஐஆர்எப், நாக் கமிட்டிகள் வழங்கும் சான்றிதழ்கள் தரவரிசையையும் இது பாதிக்கும். கல்வித் தரம் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல்கலை துணை வேந்தர்கள் இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
