UPDATED : ஆக 23, 2023 12:00 AM
ADDED : ஆக 23, 2023 04:48 PM
பல்லடம்: கவர்ன்மென்ட் ஸ்கூல், காலேஜ்ல படிச்சிட்டு, வெளிநாட்ல போய் வேலை பார்க்க முடியுமா; அங்க போய் தான், மேல் படிப்பு படிக்க முடியுமா... அந்தளவு நமக்கு, இங்கிலீஷ் பேச வரணுமே...? இப்படியொரு தாழ்வு மனப்பான்மை, அரசுப்பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் மத்தியில் இயல்பாகவே இருக்கிறது. அவர்களது முன்னேற்றத்துக்கும் இதுதான் தடை கல். இதைப் படிகல்லாக மாற்றும் பொறுப்பு, ஆசிரியர்களுக்கு தான் உண்டு. அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது&' என்ற மனநிலையில், வழிகாட்டி உதவியுடன், பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வில் ஒப்புவிக்க செய்யும், போதிப்பு முறையை பல இடங்களில் பார்க்க முடியும்; பலர் அனுபவித்திருக்கவும் முடியும்.இதையும் தாண்டி, அரசு கல்லுாரி மாணவ, மாணவியர், எளிதாக வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயில்வது எப்படி என்பது குறித்த சர்வதேச அளவிலான கருத்தரங்கை நடத்தி முடித்திருக்கிறது, பல்லடம் அரசு கலைக்கல்லுாரி ஆங்கிலத்துறை.இதில் பங்கேற்ற உஸ்பெகிஸ்தானில் உள்ள சம்பிரம் பல்கலை., ஆங்கிலத்துறை பேராசிரியர் ராமன் கோபால் தெரிவித்த கருத்துகள்:
வெளிநாடு சென்று படிக்க விருப்பமுள்ள, வாய்ப்புள்ள மாணவ, மாணவியர் ஆங்கில மொழியுடன், தாங்கள் செல்லவுள்ள நாடுகளில் பேசும் மொழியையும் ஓரளவு கற்றுத்தேர்வது நல்லது. மொழிப்புலமையுடன், உச்சரிப்பு முறையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு சர்வதேச அளவில் நடத்தப்படும் மொழி தேர்வுகளில் பங்கெடுப்பது, பலன் தரும். செல்லவுள்ள நாடுகளின் கலாசாரம், பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்வதும், சற்று கடினமானதாகவே இருக்கும்; அதையெல்லாம், அங்கு செல்வதற்கு முன்பே, ஓரளவு அறிந்து, மனதளவில் தயாராகி செல்வது, அங்குள்ள பள்ளி, கல்லுாரிகளின் பயிற்றுவிப்பு முறையை அறிந்துக் கொள்வது, சிரமத்தை குறைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.கருத்தரங்க ஏற்பாடுகளை செய்த கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி கூறுகையில், அரசு கல்லுாரி மாணவ, மாணவியரின் வெளிநாடு கனவை நனவாக்கும் வகையில் தான், இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். இதற்கு முன், ஓமன் நாட்டில் இருந்து ஒரு பேராசிரியரை வரவழைத்து, அவரது அனுபவம், ஆலோசனைகளை பகிரச் செய்தோம். கல்லுாரி முதல்வர் மணிமேகலையின் ஊக்குவிப்பும், ஒத்துழைப்பும், இதுபோன்ற கருத்தரங்கு நடத்த முக்கிய காரணம், என்றார்.
