போக்சோ குறித்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு பாடம் நடத்த முடிவு
போக்சோ குறித்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு பாடம் நடத்த முடிவு
UPDATED : ஆக 24, 2023 12:00 AM
ADDED : ஆக 24, 2023 03:44 PM
கோவை:
கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போக்சோ சட்டம் என்றால் என்னவென்றே தெரியாது என தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் அதிர வைத்துள்ளனர். இதனால், அரசுப்பள்ளிகளில் செயல்படுவது போல, தனியார் பள்ளிகளிலும் போக்சோ கமிட்டி கட்டாயம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 658 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில், மத்திய, மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளும் அடக்கம். அனைத்து அரசுப்பள்ளிகளிலும், போக்சோ கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, இக்கமிட்டி சார்பில், பாலியல் வன்முறை தடுப்பு, தவறான தொடுதல், பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்டால் புகார் தருவதன் அவசியம், 1098 சைல்டு லைன் எண் செயல்பாடுகள், சட்ட பாதுகாப்பு குறித்தெல்லாம் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பிலும், அவ்வப்போது பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், தனியார் பள்ளிகளில் இக்கமிட்டி செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியே. சமீபத்தில் கலெக்டர் தலைமையில், தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 98 சதவீதம் பேருக்கு, போக்சோ சட்டம் குறித்த, விழிப்புணர்வே இல்லாதது தெரியவந்தது. இதனால், தனியார் பள்ளிகளில் போக்சோ கமிட்டி கட்டாயம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பெல்ராஜ் தெரிவித்தார்.அவர் கூறுகையில், பள்ளி அளவில் அமைக்கப்பட்டுள்ள போக்சோ கமிட்டியில், தலைவராக பெண்களே இருப்பர். தலைமையாசிரியர் ஆணாக உள்ள பள்ளிகளில், உதவி தலைமையாசிரியையோஅல்லது மூத்த பெண் ஆசிரியரையோ தலைவராக நியமிக்க வேண்டும். இவர் தவிர, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ பிரதிநிதிகள் என, ஏழு பேர் கமிட்டியில் இருக்க வேண்டும். மாணவர்கள் பாலியல் சார்ந்த புகார்களை, இக்கமிட்டியில் தெரிவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், முதற்கட்டமாக கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின் அப்பள்ளிகளில் பணிபுரியும், பேருந்து ஓட்டுநர்களுக்கு, போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆவண செய்யப்படும் என்றார்.ஏன் இந்த அலட்சியம்?
தனியார் பள்ளியில் படித்த சகோதரன் - சகோதரியை, பள்ளி வேனில் கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்த கோவையில், பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து தெரியாது என வெளியாகியுள்ள தகவல், பெற்றோரை அதிரச் செய்துள்ளது. போக்சோ சட்டம் குறித்து மாவட்ட நிர்வாகமும் சரி, பள்ளிக்கல்வித்துறையும் சரி; போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் அலட்சியமாக செயல்படுவதையே இது காட்டுகிறது.
