நிலவில் கால் பதித்த இந்தியா: சர்வதேச ஊடகங்கள் புகழாரம்!
நிலவில் கால் பதித்த இந்தியா: சர்வதேச ஊடகங்கள் புகழாரம்!
UPDATED : ஆக 25, 2023 12:00 AM
ADDED : ஆக 25, 2023 01:23 PM
புதுடில்லி:
சந்திரயான் - 3 வெற்றி குறித்து உலகின் அனைத்து முன்னணி நாளிதழ்களும் போட்டி போட்டு செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியும், கேலி சித்திரங்கள் வரைந்தும் கிண்டல் செய்து வந்த பல முன்னணி அமெரிக்க நாளிதழ்கள், வானளாவ புகழ்ந்துள்ளன.அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்கள், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பி.பி.சி., செய்தி தொலைக்காட்சி மற்றும் இணைதளங்கள், தி கார்டியன் நாளிதழ், மேற்காசிய நாடான கத்தாரைச் சேர்ந்த, அல் ஜஸீரா நாளிதழ் மற்றும் இணையதளம், அமெரிக்காவின், சி.என்.என்., தொலைக்காட்சி, பாகிஸ்தானைச் சேர்ந்த, டான் மற்றும், தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் நாளிதழ்கள், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த, தி ஸ்டார் உள்ளிட்ட நாளிதழ்கள், சந்திரயான் - 3 வெற்றி குறித்த செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் சி.என்.என்., செய்தி தொலைக்காட்சி, இந்தியாவை விண்வெளியின் வல்லரசு என, குறிப்பிட்டு உள்ளது.ஆச்சரியத்தில் அமெரிக்கா!
அமெரிக்க அரசியல் தலைவர்கள், நாளிதழ்கள், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் சந்திரயான் - 3 வெற்றியை வெகுவாக பாராட்டி உள்ளனர். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி மாபெரும் சாதனை படைத்துள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். விண்வெளி துறையில் இந்தியாவின் கூட்டாளியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் வெளியிட்டுள்ள செய்தியில், நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ள இந்தியாவுக்கு வாழ்த்துகள். சந்திரயான் - 3 திட்டத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியதில் பெருமை கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் பல்வேறு அமெரிக்க தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஐ.நா., பாராட்டு!
ஐ.நா., பொது செயலர் ஆன்டோனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த வெற்றி உற்சாகம் அளிக்கிறது. இதுவரை யாரும் தரை இறங்கிடாத நிலவின் தென் துருவத்தில் கால் பதித்துள்ள இந்தியாவுக்கு வாழ்த்துகள். இது ஒரு மிகப்பெரிய சாதனை. இதை உலகமே உற்று நோக்குகிறது என்றார்.
