UPDATED : ஆக 25, 2023 12:00 AM
ADDED : ஆக 25, 2023 05:21 PM
விழுப்புரம்:
சந்திரயான் - 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்ததை, அதன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுவின் சொந்த ஊரான விழுப்புரத்தில், மக்கள் கொண்டாடினர்.இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த வெற்றியை, நாடு முழுதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் சொந்த ஊரான விழுப்புரத்தில், அவரது வீட்டில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.விழுப்புரம் முருங்கப்பாளைய தெருவில் உள்ள வீரமுத்துவேலின் வீட்டில் திரண்ட மக்கள், அவரது தந்தை ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரும், எஸ்.ஆர்.எம்.யு., தொழிற்சங்க செயல் தலைவருமான பழனிவேலுக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.பழனிவேல் கூறியதாவது:
இன்றைய நாள், இந்தியா மட்டுமின்றி, தமிழக மக்களும் மறக்க முடியாத நன்னாள். என் மகன் வீரமுத்துவேல், சந்திரயான் திட்டத்தை ஏற்றது முதல், பல மாதங்களாக விடாமுயற்சியாக, குழுவாக செயல்பட்டு திட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளார். இந்தியா எப்போதும், வீரமான வெற்றி பெறும் நாடு என்பதை நிரூபித்து வருகிறது.சந்திரயான் திட்டத்தில், உலக நாடுகளில் இந்தியா முன்னிலை வகித்துள்ளது பெருமை தருகிறது. சந்திரயான் திட்டத்தில் வெற்றி கண்டு, இந்தியா ஒரு வல்லரசு நாடு என்ற பெருமையை எட்டியுள்ளோம். இஸ்ரோவின் தீவிர ஆராய்ச்சி பணியால், என் மகன் வீரமுத்துவேல் வீட்டிற்கும் வர முடியவில்லை. எங்களிடம் அவர் அதிகம் பேசவும் முடியவில்லை. அவர் சாதித்தது எங்களுக்கு சந்தோஷம்.இவ்வாறு அவர் கூறினார்.
