சாதனை படைத்த சந்திரயான் 3 மறையூர் விஞ்ஞானியால் பெருமை
சாதனை படைத்த சந்திரயான் 3 மறையூர் விஞ்ஞானியால் பெருமை
UPDATED : ஆக 28, 2023 12:00 AM
ADDED : ஆக 28, 2023 07:14 AM
மூணாறு:
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3 திட்டத்தில் இடுக்கி மாவட்டம் மறையூரைச் சேர்ந்த விஞ்ஞானி நாராயணசாமியின் பங்களிப்பும் உள்ளதால் அப்பகுதி மக்கள் பெருமையடைந்தனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் கடைகோடியில் மறையூர் பகுதி உள்ளது. அங்கு கரிமுட்டி பகுதியில் வசிக்கும் மாரியப்பன்- கோமதி தம்பதியினரின் மகன் நாராயணசாமி 38. இவர் சந்திரயான் 3 விண்கலத்தை உருவாக்க தேவையான உதிரி பாகங்களின் தரத்தை கண்டறியும் மெக்கானிக்கல் தரக்கட்டுப்பாடு பிரிவில் பணியாற்றினார். விண்கலத்தை உருவாக்கி ஆய்வு நடத்தி அதனை செலுத்தும் வரையில் அப்பிரிவினரின் முக்கிய பங்கு வகித்தனர்.உடுமலைபேட்டையில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்தவர் 2008ல் இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளராக இணைந்தார். பணி செய்து கொண்டு திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மாலை நேர பி.டெக் படித்து பட்டம் பெற்றார். அங்கு தற்போது எம்.டெக் படித்து வருகிறார்.இஸ்ரோவில் பணி உயர்வு பெற்று 2017 முதல் திருவனந்தபுரத்தில் விஞ்ஞானியாக பணியாற்றிகிறார். சரித்திரம் படைத்த சந்திரயான் 3 திட்டத்தில் நாராயணசாமியின் பங்களிப்பும் உள்ளதை எண்ணி மறையூர் பகுதி மக்கள் பெருமையடைந்தனர்.நாராயணசாமி கூறியதாவது:
சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றியது மிகவும் பெருமையாக உள்ளது. ரஷ்யா தோல்வியை தழுவிய நிலையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். சந்திரயான் 2 தோல்வி அல்ல. அது நமக்கு பாடமாக அமைந்தது. தோல்வியில் கற்றுக்கொண்ட பாடத்தை பயன்படுத்தி நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சக்தி வாய்ந்த சந்திரயான் 3 யை உருவாக்க முடிந்தது. உலக அளவில் நாம் மேலும் உயர்வோம், என்றார்.
