அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படுமா?
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படுமா?
UPDATED : ஆக 28, 2023 12:00 AM
ADDED : ஆக 28, 2023 01:18 PM
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் பசியுடன் பள்ளிக்கு வருவதை அறிந்து அவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தை, கடந்த ஆண்டு மே மாதம் 7 ம் தேதி, முதல்வர் அறிவித்தார். அதற்கான அரசானை வெளியிடப்பட்டு, கடந்த ஆண்டு செப்., 15 ம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு குறித்த பட்டியல் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.அதில் ரவா உப்புமா, சேமியா, அரிசி உப்புமா வகைகள், வெண் பொங்கல், ரவா பொங்கல், காய்கறி சாம்பார் போன்ற உணவு வகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை ரவா கேசரி, சேமியா கேசரி இனிப்பு வகைகளும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 50 கிராம் ரவை, கோதுமை, அரிசி, சிறுதானியங்கள் போன்றவையும், 15 கிராம் பருப்பு, உள்ளூர் காய்கறிகள் வழங்கப்பட வேண்டும். இதற்கான மளிகை பொருட்கள் அப்பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிப கடைகளில் கொள்முதல் செய்யப்படுகிறது. சமையல் செய்வதற்காக அந்தந்த அரசு பள்ளிகளில் தற்காலிக சமையலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இத்திட்டம் கண்காணிக்கப்படுகிறது. இந்த உணவு திட்டம் அரசு பள்ளிகளில் பயிலும் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. அரசு திட்டங்கள் அனைத்தும் இப்பள்ளிகளுக்கும் வழங்கப்படும் நிலையில், காலை சிற்றுண்டி திட்டமும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இதுவரை அறிவிக்கப்படாததால், மாணவர்கள் ஏமாற்றமடைந்தள்ளனர். இதனால், குறைந்த மாணவர்கள் படிக்கும் ஒரு சில அரசு உதவி பெறும் பள்ளிகளில், பள்ளி நிர்வாகம் சார்பில், தாங்களாகவே முன்வந்து காலை சிற்றுண்டி வழங்கி வருகின்றன்.கடலுார் கல்வி மாவட்டத்தில் 124, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 98 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 70 சிறுபான்மையின பள்ளிகள் என, மொத்தம் 292 உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கும் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என, அரசு உதவி பெறும் பள்ளிகள் நடத்தும் நிர்வாகிகள் மற்றும் மாணவரகளின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
