UPDATED : ஆக 31, 2023 12:00 AM
ADDED : ஆக 31, 2023 09:29 AM
கரூர்:
நிலவின் தென் துருவத்தில் கனிம வளங்கள் உள்ளது பற்றிய செய்திகள் வருகின்றன என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்த விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விண்வெளியை தாண்டி, விவசாயம் உள்ளிட்ட ஏராளமான துறைகளில், அறிவியல் தொழில் நுட்பத்தின் புதுமையை புகுத்த வேண்டிய நிலை உள்ளது. சந்திரயான்-3 ஆய்வின் மூலம் நிலவின் தென் துருவத்தில், கனிம வளங்கள் உள்ளது பற்றிய செய்திகள் வருகின்றன. இதை கவனித்த, மற்ற நாடுகளும் அந்த இடத்தை நோக்கி வருகின்றனர். நிலவு சார்ந்த ஆய்வுகளில், வெப்பமயமாதலுக்கு பதிலாக, நிலவில் இருந்து சில பொருட்களை கொண்டு வர முடியும். இதனால், வெப்பமயமாதல் இல்லாத, ஒரு எரிபொருளை உருவாக்குவதில், இந்தியா முதலிடம் பெற வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டது போல, இந்தியாவில் அறிவியல் தொழில் நுட்ப எழுச்சி ஏற்பட்டுள்ளது. குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் முயற்சி நடக்கிறது. அங்கிருந்து பெரிய மற்றும் சிறிய செயற்கோள்களை அனுப்ப முடியும். ஹரி கோட்டாவை விட, குலசேகரபட்டினம் சிறந்த கட்டமைப்பு உள்ள இடமாக மாற வாய்ப்புள்ளது. மனிதனின் அடுத்த விண்வெளி ஆராய்ச்சி, நிலவும், பூமிக்கும் பாலமாக அமையும். அதில், இந்தியா முன்னணியில் உள்ளது என்பதை, சந்திரயான்-3 நிருபித்து காட்டியுள்ளது. நிலவில் ஆக்சிஜன் வாயுவை உருவாக்க முடியும். அதை எப்படி சேமிப்பது என்பதை பார்க்க வேண்டும். ஆதித்தியா செயற்கைகோள், சூரியனை சுற்றி வராது. சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட ஈர்ப்பு விசைகளை ஒத்துபோகிற இடத்தை சுற்றி போகும். இதனால், 24 மணி நேரமும், சூரியனை பார்த்து கொண்டே இருக்கலாம். சூரியனில் ஏற்படும் மாற்றங்களை, முன் கூட்டியே அறிவிக்கும் வகையில், விண்வெளியில் பருவநிலை மாறும். அப்போது, நமது செயற்கோள்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
