பஸ்சை தள்ளிய மாணவியர் அரசுக்கு எதிராக ஊழியர்கள் கொந்தளிப்பு
பஸ்சை தள்ளிய மாணவியர் அரசுக்கு எதிராக ஊழியர்கள் கொந்தளிப்பு
UPDATED : ஆக 31, 2023 12:00 AM
ADDED : ஆக 31, 2023 09:31 AM
நாகர்கோவில்:
பாதியில் நின்ற பஸ்சை மாணவியர் தள்ளி விட்டு ஓடச் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து, கடந்த 27ல், பழைய தாலுகா அலுவலகம் நோக்கி, தடம் எண் 36 - எம் அரசு டவுன் பஸ் சென்றது. கேப் ரோடு அருகில் பஸ் பழுதாகி நின்று விட்டது. அந்த பஸ்சில் கல்லுாரி மாணவியர், 30 பேர் இருந்தனர். அவர்கள் பஸ்சில் இருந்து இறக்கப்பட்டனர். அவர்களோடு சேர்ந்து, கண்டக்டரும் சிறிது துாரத்துக்கு பஸ்சை தள்ளினார். பின் பஸ் ஓட துவங்கியது. இது பெரிய அளவில் சர்ச்சையானது.இது குறித்து, பாரதிய மஸ்துார் சங்க மாவட்ட பொறுப்பாளர் குமாரதாஸ் கூறியதாவது:
இயக்க முடியாத நிலையில் உள்ள பஸ்களை கொடுத்து ஓட்டுங்கள் என நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்கிறது. டிரைவர், கண்டக்டர்களுக்கு வேறுவழி இல்லை. கல்லுாரி மாணவியர் பஸ்சை தள்ளிய விவகாரத்தில், போக்குவரத்து கழக அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு பதில் சொல்வதற்காக, டிரைவர் பாபு, கண்டக்டர் செல்வராஜ், போர்மேன் சுப்பிரமணிய பிள்ளை, மெக்கானிக் வைகுண்ட கிருஷ்ணன் ஆகியோரை கடந்த 29ல் சஸ்பெண்ட் செய்தனர்.சம்பந்தப்பட்ட பஸ்சில் பல நாட்களாக பேட்டரி பழுதாகி இருந்துள்ளது. ரிப்போர்ட் செய்தும், நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படித்தான், தொடர்ந்து ரிப்போர்ட் செய்தும் பிரேக் கூட சரி செய்யாத பஸ்சில் ஏற்பட்ட பெரிய அளவிலான பழுதை தொடர்ந்து, டிரைவர் ஒருவர் பஸ்சை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார். அதற்காக, நிர்வாகம் அவரை, சஸ்பெண்ட் செய்தது. இனி பாதி வழியில் பஸ்கள் பழுதானால் அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர், கண்டக்டர் சென்று விடுவர். பயணியருக்கு தான் சிரமம்.இவ்வாறு அவர் கூறினார்.இனி போராட்டம் தான்
தமிழகம் முழுதும் அரசு பஸ்கள் நிலை இதுதான். நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தாமல், போக்குவரத்து கழக ஊழியர்களை கொடுமைக்கு ஆளாக்குவது சரியல்ல. இதே நிலை தொடர்ந்தால், போக்குவரத்து கழக கோட்ட அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என ஹிந்து முன்னணி துணை தலைவர், வி.பி.ஜெயகுமார் கூறியுள்ளார்.பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும்
பஸ்சில் பேட்டரி பழுது, அதனால் பாதியில் நின்று விட்டது என சம்பந்தப்பட்ட டிரைவர் பாபு, நிர்வாகத்திடம் தெரிவித்தார். பஸ்சை அங்கேயே நிறுத்த சொல்லி விட்டோம். ரெகவரி பஸ் சென்று, பழுதான பஸ்சை பணிமனைக்கு எடுத்து வருவதற்குள், மாணவியரை வைத்து தள்ள வைத்து, பஸ்சை ஓட வைத்துள்ளனர். இது தவறான செயல். தன்னிச்சையாக செயல்பட்ட காரணத்தால், சம்பந்தப்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். பணிமனையில், போதிய அளவில் பஸ் உதிரிபாகங்கள் உள்ளன. இனியாவது டிரைவர், கண்டக்டர்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என பணிமனை பொறுப்பு மேலாளார் கண்ணன் கூறினார்.
