UPDATED : ஆக 31, 2023 12:00 AM
ADDED : ஆக 31, 2023 10:38 AM
சென்னை:
எண்ணும் எழுத்தும் திட்டமும் வேண்டாம்; திட்டம் குறித்த ஆய்வும் வேண்டாம் என பள்ளிக் கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி திட்டம் உள்ளது. இதில் ஆசிரியர்களுக்கு ஆடல், பாடல் என்ற முறையில், ரைம்ஸ் கற்று தரப்படுகிறது. இதற்காக பயிற்சி வகுப்புகள் அடிக்கடி நடப்பதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில் டிட்டோஜாக் எனும் தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம்:
எண்ணும் எழுத்தும் என்ற திட்டம், ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச் சுமைகளை ஏற்படுத்துகிறது. அதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. இந்த திட்ட செயல்பாடுகளை, பி.எட்., படிக்கும் மாணவர்களை கொண்டு, ஆய்வு செய்ய உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. எக்காரணம் கொண்டும் எந்த வடிவத்திலும், ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது. அவ்வாறு திட்டமிட்டால், பயிற்சிகளை ஆசிரியர்கள் புறக்கணிக்க நேரும்.பள்ளி மேலாண்மை குழு என்ற பெயரில், மாதம் இரு முறை கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்யவே, ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படுகிறது. எனவே, இந்த கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை மட்டும், ஆரோக்கியமான முறையில் நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
