புதுச்சேரி அரசு பள்ளிகளில் புத்தகமில்லா தினம் உற்சாகம்
புதுச்சேரி அரசு பள்ளிகளில் புத்தகமில்லா தினம் உற்சாகம்
UPDATED : செப் 01, 2023 12:00 AM
ADDED : செப் 01, 2023 04:34 PM
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளிகளில் புத்தகமில்லா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், 2020ம் ஆண்டு வெளியிட்ட கல்விக் கொள்கையில் புத்தகப்பை இல்லா தினம் கடைப்பிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரியிலும், அனைத்து பள்ளிகளும் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தகப் பை இல்லாத தினத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.அன்றைய தினம் பள்ளிகளில் கைவினை, வினாடி வினா, விளையாட்டு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வேலை நாளான நேற்று, மாநிலம் முழுதும் உள்ள அனைத்து பிராந்திய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகப்பை இன்றி பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.இதனால், மாணவர்கள் புத்தகப்பை இன்றி கைகளை வீசியபடி பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பல்வேறு கைவினை பொருட்கள் செய்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், விளையாட்டு, கலை நிகழ்ச்சி, வினாடி வினா, விவாதம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
