UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 10:11 AM
கோவை:
பள்ளி மாணவர்களுக்கு, கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த கல்வி சார்பில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இசை, நடனம், நாடகம் ஆகிய பிரிவுகளில், 10 வகை போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு, வட்டார, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தி, பின் தேசியளவில் முதலிடம் பெறுவோருக்கு, ரொக்கப்பரிசு, சான்றிதழ், கேடயம் வழங்கப்படுகிறது.போட்டியில், அனைத்து வகை பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம். பள்ளி அளவில் முதல்பரிசு பெறுவோருக்கு, வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகளை, வரும் 25ம் தேதிக்குள் நடத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்த வேண்டும். மாநில அளவிலான போட்டிகள், அக். 10ம் தேதி, சேலத்தில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளுக்கான அறிவிப்பை, பள்ளி தகவல் பலகையில் இடம்பெற செய்வதோடு, பயிற்சி வழங்கி, மாற்றுத்திறன் மாணவர்களையும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டுமென பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், கலை பண்பாட்டு திருவிழா போட்டிகளுக்கு, மாவட்ட வாரியாக, 15 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை போதுமானதாக இல்லாததால், கடந்தாண்டு வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு, பஸ் வசதி இல்லாத பகுதிகளுக்கு, மாற்று போக்குவரத்து ஏற்பாடு செய்து தரப்படவில்லை. போட்டி நடக்குமிடத்திலும் போதிய வசதிகள் இல்லை. வராண்டாவில் அமர்ந்து மாணவர்கள் ஓவியம் வரைந்ததால் சிரமப்பட்டனர். நடப்பாண்டிலாவது போட்டிகளுக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றனர்.
