சந்திரயான் -3 வெற்றியால் வல்லரசான இந்தியா ஜார்க்கண்ட் கவர்னர் பெருமிதம்
சந்திரயான் -3 வெற்றியால் வல்லரசான இந்தியா ஜார்க்கண்ட் கவர்னர் பெருமிதம்
UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 09:15 AM
திருப்பூர்:
இந்தியா, இனி ஏழை நாடல்ல; மிகப்பெரிய வல்லரசு நாடு என்று பறைசாற்றும் வகையில் வெற்றி கண்டிருக்கிறோம் என ஜார்க்கண்ட் கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசினார்.மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில், மக்கள் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் துவங்கியது. கண்காட்சியை துவக்கி வைத்து, ஜார்க்கண்ட் கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
சந்திரயான் -3 திட்டம் புதிய இந்தியாவை உருவாக்கியுள்ளதை பார்த்து பூரிப்படைந்துள்ளோம். இந்தியா, இனி ஏழை நாடல்ல; மிகப்பெரிய வல்லரசு நாடு என்று பறைசாற்றும் வகையில் வெற்றி கண்டிருக்கிறோம்.அமெரிக்கா, ரஷ்யா சீனா செய்ய முடியாததை, இந்திய விஞ்ஞானிகள் செய்துள்ளனர். தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் யாரெல்லாம் முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி என்பது சர்வ நிச்சயம்; காலம் தள்ளிப்போனாலும், காலடியில் வெற்றி வந்தே தீரும் என்பதை, சந்திரயான் -3 கற்பித்துள்ளது. இந்தியா வளர்ந்துவிடக்கூடாது என, பலரும் மறைமுகமாக முயற்சிக்கின்றனர்; அதனை தகர்க்கும் வல்லமை மாணவ, மாணவியரிடம் இருக்கிறது.பலரும், பல கருத்துக்களை கூறினாலும், யார் கூறுவதில் உண்மை இருக்கிறது என்று ஆராயும் மனோபக்குவம் இருந்தால் மட்டுமே, இந்திய தேசத்தை கட்டிக்காக்க முடியும். சந்தை பொருளாதாரம், மனிதநேயத்தை அழித்துவிடக்கூடாது என்ற அக்கறை கொண்டது நமது இந்தியா. இந்தியாவை வீழ்த்தும் சக்தி, இனி உலகில் இருக்காது. பொருளாதாரத்தில், அமெரிக்கா, சீனாவை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தில் அமரும் நாளை உருவாக்க முடியும்.இவ்வாறு, கவர்னர் பேசினார்.முன்னதாக, மத்திய அரசின் ஒன்பது ஆண்டு சாதனைகள் அடங்கிய புத்தகம் மற்றும் திட்டம் தொடர்பான புத்தகங்கள் வெளியிடப்பட்டது.அரசியல் வேண்டாமே!
கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி என்ற பெயர் வைத்துள்ளதை, சிலர் அரசியலாக பார்க்கின்றனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர், கடவுளாக பார்க்கலாம்; நம்பிக்கையில்லாதவர்கள் ஆண், பெண் சமத்துவத்துக்கான உலக நம்பிக்கையாக ஏற்க வேண்டும் என்றார்.
