தண்டவாளமான ஆசிரியர்கள் - பெற்றோரை புறக்கணிக்காதீர்கள் மாணவர்களே!
தண்டவாளமான ஆசிரியர்கள் - பெற்றோரை புறக்கணிக்காதீர்கள் மாணவர்களே!
UPDATED : செப் 08, 2023 12:00 AM
ADDED : செப் 08, 2023 11:00 AM
தாய் தந்தைக்கு அடுத்த இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களின் பெருமை, போற்றப்பட வேண்டிய ஒன்று.ஏறுபவர்களை ஏற்றிவிடும் ஏணிபோல் அதே இடத்தில் இருந்து ஏறியவர்களின் உயர்வைப் பார்த்து பெருமைப்படுபவர்கள். ஒரு மாணவனிடம் அவனுக்கே தெரியாமல் ஒளிந்து கிடக்கும் திறமையை வெளிக் கொண்டு வந்து, அவன் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்து, அந்த ஒளி பலருக்கும் பயன்படும் விதத்தில் பரவச் செய்யும் மிக உன்னத சேவை செய்பவர்கள். சாக்ரடீஸ் என்ற ஆசிரியரால் உருவானவர் தான் பிளாட்டோ, பிளாட்டோவின் மாணவர் தான் அரிஸ்டாடில். மாவீரன் அலெக்ஸாண்டர், அரிஸ்டாடிலின் மாணவர். சரித்திரம் பறைசாற்றும் ஆசிரியர்களின் மாண்பு அது.தென்னை மரத்தின் தலையில், அதன் காய்கள் சுவையான இளநீரை சுமக்க வேண்டுமானால், அதன் சிறிய வேர்கள், பூமிக்கடியில் சாதாரண நீரைத்தேடி அலைந்தாக வேண்டும். அது போல, தன் மாணவர்களுக்கு நிறைய விஷயங்களை போதிக்க வேண்டும் என்பதற்காகவே, அதிகமாகப் படித்து தங்களைத் தயார்படுத்திக் கொள்பவர்கள் ஆசிரியர்கள். திருச்சி மாவட்டம், இனுங்கூரில், 1962ல் அரசு பள்ளியில் படித்தேன். சரித்திர பாடம் நடத்தும் அமீர் பாஷா என்பவர், பாடத்தினுாடே, பல பொது அறிவு விஷயங்களையும், வேடிக்கை நிகழ்வுகளையும் சுவைபடக் கூறுவார்.பெரிய அறிஞர்களின் பொன்மொழிகளை, பள்ளியின் பொது கரும்பலகையில் எழுதிப் போடுவார். நாங்களும் போட்டி போட்டு மனப்பாடம் செய்வோம். மாலையில் மாணவர்களிடையே போட்டி வைப்பார், பொன்மொழியை யார் மனப்பாடம் செய்கின்றனர் என்று. அப்படியே எங்களுக்கு பொன்மொழியைச் சேர்க்கும் பழக்கம் ஏற்பட்டது. மிகவும் பின்தங்கிய ஒரு கிராமத்தில் இயங்கும் அரசு பள்ளியில், மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பணியாற்றிய அந்த ஆசிரியர், என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்.திருச்சி தேசிய கல்லுாரியில் படித்தபோது, பட்டிமன்ற புகழ் பேராசிரியர் சத்தியசீலன் தான் எங்களுக்கு தமிழ் பேராசிரியர். சேட்டை செய்யும் மாணவர்களுக்கு கதை சொல்லி திருத்துவதில் அவர் வல்லவர். ஒரு முறை, ஆடு மேய்ப்பவனிடம், 50 ஆடுகள் இருந்தன. 49 ஆடுகள் பிரச்னையின்றி மேயும். ஒரே ஒரு ஆடு, எல்லை மீறிச் சென்று காலை ஒடித்துக் கொள்ளும்; நொண்டும். அவன் கவனம் முழுதும் அந்த ஆட்டின் மீது தான் இருந்தது; மற்றவற்றை கோட்டை விட்டான். அது போல, கடைசி பெஞ்ச் மணியின் சேட்டை தாங்க முடியவில்லை; என் உற்சாகம் குறைகிறது எனக் கூறி நிறுத்தினார். அந்த நொடியிலிருந்து, மணி திருந்தி விட்டான்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும் போதித்து அவனை இந்த சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக வாழ வழிகாட்டுவதும் அவர்களின் கடமை. காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது, என் ஆசிரியருடன் ஒரு பொதுநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன். நான் அவரது மாணவன் என்று அவர், பெருமையுடன் குறிப்பிட்டபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லாராலும் ஒருமித்த கருத்துடன் பாராட்டப்படும் அப்துல் கலாம், தன் உயர்வுக்கு, தன் ஆசிரியர் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.நகரத்தில் வேலைவாய்ப்பு தேடி அலைந்த ஒரு எம்.ஏ., பட்டதாரி வாலிபர் வேலை கிடைக்காமல், கிராமத்தில் வேலை தேட ஆரம்பித்தார். எண்ணெய் தயாரிக்கும் நாட்டு செக்கு ஒன்று, அவரது கண்ணில் பட்டது. இரண்டு மாடுகள் செக்கு இழுத்தன. அதன் உரிமையாளர், பக்கத்தில் இருந்த ஒரு கொட்டகையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அவரை அணுகி, தன் நிலையை விளக்கினார் அந்த பட்டதாரி.சாப்பிடபடி இருந்தவர், இடையிடையே, ஹேய்... ஹேய்... என்று குரல் கொடுத்தபடி இருந்தார். பட்டதாரி, ஏன் இப்படி குரல் கொடுக்கிறீர்கள்? எனக் கேட்டார். என் மாடுகள், செக்கை இழுக்கின்றன. நான் மறைவில் இருப்பது தெரிந்தால், அவை ஓட்டத்தை நிறுத்தி விடும். நான் இருப்பதை உணர்த்தவே குரல் கொடுக்கிறேன் என்றார். மாடுகள் நின்றபடியே தலையை ஆட்டினால் என்ன செய்வீர்கள்? என அந்த பட்டதாரி கேட்க, அதனால் தான் அவற்றை நான் எம்.ஏ., படிக்க வைக்கவில்லை என, ஒரு போடு போட்டார்.எனவே, பொது அறிவைப் பயன்படுத்தும் முறையை, ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதை நல்ல முறையில் பயன்படுத்துவதை விட, அதை எப்படி தவறாகப் பயன்படுத்தினால் பணம் சம்பாதிக்கலாம் என, பலரும் கிளம்பி இருக்கின்றனர். சைபர் கிரைம் போலீசாருக்கு இவர்கள் சவாலாக இருக்கின்றனர். ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பதற்கேற்ப, படிப்போடு கூட, பண்பையும், வாழ்க்கையின் உண்மை தத்துவங்களையும் கற்று, அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும், கற்றாக வேண்டும்.மிக உயர்ந்த படிப்போடு, மிக உயர்ந்த பதவியில் அமர்ந்தவர்கள் கூட, தான் செய்யும் செயல்கள் எம்மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று சிந்திக்க இயலாமல் அல்லது சிந்திக்க முயலாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். இன்று அராஜகமாக செயல்பட்டும், அடாவடியாக பேசியும் கூட்டத்தை கவர்ந்திழுக்க நினைக்கும் சில அரசியல் வாதிகள், பிரச்னைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் நிகழ்வுகளே இதற்கு உதாரணம். சமீபத்தில், போதைக்கு அடிமையான ஒரு பிளஸ் 2 மாணவன், தேர்வின்போது ஆசிரியரை தாக்கியதாக செய்தி வெளியாகி இருந்தது.இரு கரைகளின் கட்டுப்பாட்டில் ஓடும் வரைதான் அது மக்களுக்கு பயன்படும் நதி. கரையை உடைத்து வெளியே பாய்ந்தால் அது, அழிவை ஏற்படுத்தும் வெள்ளம். இரண்டு தண்டவாளங்களின் தடத்தில் பயணிக்கும் ரயில் வண்டி தான், குறித்த இடத்திற்கு பயணியரை இட்டுச் செல்லும்; தடம் புரண்ட வண்டி, உயிரிழப்பை ஏற்படுத்தும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை புறக்கணிக்கும் மாணவர்களின் நிலையும் அதுதான்.தொடர்புக்கு: 9840488111, இ.மெயில்: spkaruna@gmail.com, மா.கருணாநிதி, காவல்துறை கண்காணிப்பாளர் - ஓய்வு
