UPDATED : செப் 08, 2023 12:00 AM
ADDED : செப் 08, 2023 07:20 PM
ஈரோடு:
உரிய நேரத்துக்கு பஸ் இயக்கப்படாததால், இணைப்பு பஸ்களை மாணவ, மாணவியர் மற்றும் மக்கள் தவற விடுவதாக கூறி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் ராசன் தலைமையில், கிராம மக்கள், மாணவியர் மனு வழங்கி கூறியதாவது:
மொடக்குறிச்சி தாலுகா, சென்னிமலை பகுதியில் அட்டவணை அனுமன்பள்ளி கிராமத்துக்கு உட்பட்ட அண்ணா நகர், வேமாண்டம்பாளையம், வெள்ளிவலசு, காமராஜபுரம், ஊஞ்சல்பாளையம், பழையபாளையம், முருங்கத்தொழுவு கிராமங்களில் பல ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.மருத்துவமனை, பள்ளி, மருத்துவமனை போன்றவற்றுக்காக வெளியூர் செல்ல, அரச்சலுார் செல்ல வேண்டும். இதற்காக, 33 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்று, ஈரோடு - முருங்கத்தொழுவு செல்லும் பஸ்சை (எண்:34), பள்ளத்துக்கடை நிறுத்தத்தில் பிடித்து, பின் ஈரோடு செல்ல வேண்டும்.அரச்சலுாரில் புறப்படும், 33ம் எண் பஸ் ஓட்டுனர், நடத்துனர் தாமதமாக எடுத்தும், இயக்கியும் வருவதால், இணைப்பு பஸ்ஸை பிடிக்க முடிவதில்லை. தாமதமாக இயக்குவது குறித்து கேட்டால், இலவசமாக பயணிப்பதாக கூறி, மரியாதையின்றி பேசுகின்றனர். இந்த பஸ்சை தவறவிட்டால், 6 கி.மீ., நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே பஸ் எண், 33ஐ உரிய நேரத்தில் இயக்குவதுடன், இணைப்பு பஸ்சையும் இந்த பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
