UPDATED : செப் 08, 2023 12:00 AM
ADDED : செப் 08, 2023 07:30 PM
புதுடில்லி:
இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர், பிரிட்டன், ஜப்பான் என பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்தியா நோக்கி வரத்துவங்கி உள்ளனர். டில்லி வந்து சேர்ந்த தலைவர்களுக்கு ஆட்டம் பாட்டம், இசை முழங்கிட சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த, 20 நாடுகள் அங்கம் வகிக்கும், ஜி - 20 அமைப்பின் உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் புதுடில்லியில் நடக்கிறது. இதையொட்டி புதுடில்லி விழாகோலம் பூண்டுள்ளது. நகரமே விளக்கொளியில் ஜொலிக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் வருகையால், பாதுகாப்பு கருதி மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு மூன்று நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அமெரிக்க அதிபர் பைடன்
இம்மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (செப்-8) வாஷிங்டனில் இருந்து இந்தியா புறப்பட்டார். அவர் இன்று இரவு டில்லி வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று காலை அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ் முதல் தலைவராக இன்று காலை புதுடில்லி வந்திறங்கினார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நமேஸ்தே சொன்ன பிரிட்டன் பிரதமர் மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டில்லி வந்தார் . அவரை மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர். நமஸ்தே என்றார் பிரதமர் ரிஷி. இதனைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா, தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ராமபோசா ஆகியோரும் டில்லி வந்தடைந்தனர். முன்னதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆப்ரிக்க யூனியன் தலைவர் அசாலி அசோவுமணி ஆகியோரும் டில்லி வந்தடைந்தனர்.இந்த ஆண்டு, ஜி - 20 அமைப்புக்கு நம் நாடு தலைமை ஏற்றுள்ளது. இதையொட்டி, கடந்த ஓராண்டாக நாடு முழுதும், 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களில் ஜி - 20 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற துறை ரீதியிலான கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. இதன் இறுதிக்கட்டமாக பிரதான மாநாடு நாளையும், நாளை மறுநாளும் புதுடில்லியில் நடக்கவுள்ளது. இதையொட்டிய கொண்டாட்டத்துக்கு தயாராகி வரும் புதுடில்லி நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவாக பார்ப்போம்:
* நாளை மற்றும் நாளை மறுநாள் தான் மாநாடு நடக்கிறது என்றாலும், புதுடில்லியில் நேற்று முதலே போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால், பெரும்பாலான அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு நேற்று முதலே விடுமுறை அறிவிக்கப்பட்டன. எனவே, புதுடில்லி மக்களுக்கு இது நான்கு நாட்கள் விடுமுறையுடன் கூடிய நீண்ட வாரக்கடைசியாக அமைந்துள்ளது* புதுடில்லிக்குள் சரக்கு வாகன போக்குவரத்துக்கு நேற்று இரவு 9:00 மணி முதல், 10ம் தேதி நள்ளிரவு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. டாக்சி மற்றும் ஆட்டோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்கு 9ம் தேதி காலை 5:00 மணி முதல், 10ம் தேதி நள்ளிரவு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது*இன்று காலை முதல் 10ம் தேதி வரை, புதுடில்லி மாவட்டம் முழுதும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியா கேட், சி - ஹெக்ஸகன் உட்பட அதை சுற்றியுள்ள பகுதிகளில் நுழைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அப்பகுதியில் வசிப்போர் முறையான சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும், அனுமதி பெற்ற வாகனங்கள், துப்புரவு, உணவு வழங்கல், ஹோட்டல் மற்றும் மருத்துவமனைகளுக்கான கழிவு மேலாண்மை வாகனங்கள் போன்ற சேவை அமைப்புகளின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது* புதுடில்லியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்கள், கிளவுட் கிச்சன் எனப்படும், உணவு சேவைகளுக்கான சமையல் அறைகள் இன்று முதல், 10ம் தேதி வரை மூடப்படும். ஸ்விக்கி, ஸோமாட்டோ, அமேசான், பிளிப்கார்ட் போன்ற, ஆன்லைன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வினியோக சேவைக்கு கட்டுப்பாட்டு மண்டலத்தில், 10ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து சேவைக்கு மட்டும் அனுமதி உண்டு*அமெரிக்கா, பிரிட்டன், சீனா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் பங்கேற்கும் மாநாடு இந்தியாவில் முதல்முறையாக நடக்கிறது என்பதால், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன&'ஸ்னைப்பர்&' துப்பாக்கி ஏந்திய வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கான போலீசார் புதுடில்லி முழுதும் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.நம் விமான படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புதுடில்லி வான்வெளியில், ட்ரோன் எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்களின் நடமாட்டம் கண்காணிக்கப் படுகின்றன* ஜி - 20 மாநாடு நடக்கும் அரங்கை சுற்றியுள்ள பகுதியில் கொசுத் தொல்லையை ஒழிப்பதற்கு எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள 180 ஏரிகள் மற்றும் நீரூற்றுகளில், கொசுவின் கருமுட்டைகளை உண்ணும் மீன்கள் அதிக எண்ணிக்கையில் விடப்பட்டுள்ளன.தலைவர்கள் தங்கும் ஹோட்டல்கள்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐ.டி.சி., மவுரியா ஹோட்டலில் தங்குகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றபோதும், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இந்தியா வரும் ரிஷி சுனக், புதுடில்லியின் ஷாங்ரி லா ஹோட்டலில் தங்குகிறார். சீன அதிபர் ஷீ ஜின்பிங்குக்கு பதிலாக மாநாட்டில் பங்கேற்க வரும் சீன பிரதமர் லீ கியாங் தாஜ் ஹோட்டலில் தங்குகிறார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லலித் ஹோட்டலில் தங்குகிறார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், இம்பீரியல் ஹோட்டலில் தங்குகிறார்.
