மனிதவளமே பொருளாதாரத்தை மேம்படுத்தும்! அமைச்சர் தியாகராஜன் பேச்சு
மனிதவளமே பொருளாதாரத்தை மேம்படுத்தும்! அமைச்சர் தியாகராஜன் பேச்சு
UPDATED : செப் 09, 2023 12:00 AM
ADDED : செப் 09, 2023 10:47 AM
கோவை:
கோவையில் ஐ.சி.டி., அகாடமி சார்பில், நேற்று பிரிட்ஜ் 2023 கருத்தரங்கு நடந்தது. மனிதவள மூலதனத்தை உருவாக்குவதால் மட்டுமே பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் பேசினார்.தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு, வேலைக்காக காத்திருக்கின்றனர். வேலை வழங்கும் நிறுவனங்களோ, திறன்களை எதிர்பார்க்கின்றன. பல நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் வேலை செய்ய தகுதியான நபர்களை தேடி வருகின்றன. தகவல்களை பெறுவதிலும், சரியானவர்களை தேடி கண்டுபிடிப்பதிலும் இன்னும் இடைவெளிகள் உள்ளன.தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் - 4 தேர்வை நடத்தியது. 10ம் வகுப்பு, பிளஸ்2 கல்வித்தகுதி கொண்ட இந்த பணியிடங்களில் எண்ணிக்கை 7,000 மட்டுமே. ஆனால் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சமாக உள்ளது. தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். நிதிச்சந்தையில், மனித மூலதனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மனித மூலதனம் இருக்கும் இடத்தில் நிதிச்சந்தை தேடி வருகிறது. மனிதவள மூலதனம் என்பது, அரசுக்கும், மாநிலத்திற்கும் மிக முக்கியமானது. இதனால் மட்டுமே டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.இவ்வாறு, அமைச்சர் தியாகராஜன் பேசினார்.ஐ.சி.டி., அகாடமி தலைமை செயல் அதிகாரி ஹரி பாலச்சந்திரன் வரவேற்றார். இயக்குனர் லட்சுமி நாராயணசாமி கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். போலரிஸ் குழுமத்தின் நிறுவனர் அருண் ஜெயின் துவக்க உரையாற்றினார். வேலை வாய்ப்பில் சிறப்பாக பங்காற்றிய தொழில் நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
