ஊட்டியில் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., தபால் தலை காட்சிப்படுத்தப்பட்டது
ஊட்டியில் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., தபால் தலை காட்சிப்படுத்தப்பட்டது
UPDATED : செப் 10, 2023 12:00 AM
ADDED : செப் 10, 2023 04:35 PM
ஊட்டி:
ஊட்டி தலைமை அஞ்சலகத்தில் திறக்கப்பட்ட தபால் தலை காட்சியகத்தில், தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., அவர்களின் தபால் தலை காட்சிப்படுத்தப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் அருகே தலைமை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தபால் தலை மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுத்தும் நோக்கத்துடன் புதிய அஞ்சல் தலை தொகுப்பு காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியகத்தில், ரயில்வே துறையின் வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்கள், புவியியல் குறியீடு தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், 30 தபால் தலை சட்டகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அதில், தேசபக்தரும், சமூக சீர்திருத்தவாதியும், சிறந்த பத்திரிகையாளருமான தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் சிறப்பு தபால் தலை தொகுப்பு, பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காட்சியகத்தை தபால் துறை தலைவர் சாருகேசி, மேற்கு மண்டல தபால் துறை தலைவர் சுமிதா அயோத்தியா ஆகியோர் திறந்து வைத்தனர். திரளான மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா கூறுகையில், ஊட்டியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நுாற்றாண்டு பழமையான கட்டடத்தில் அஞ்சலக தலைமையகம் அமைந்துள்ளது. இதன் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில், தபால் தலை காட்சியகம் திறக்கப்பட்டது. அனைத்து வேலை நாட்களிலும் காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்கு திறந்திருக்கும். அனுமதி இலவசம், என்றார்.நிகழ்ச்சியில், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் நாயர், தபால் தலை சேகரிப்பாளர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
