பாரதியார் பாடலில் அதிகம் ஒலித்த பாரதம் பாரதி பேரன் பெருமிதம்
பாரதியார் பாடலில் அதிகம் ஒலித்த பாரதம் பாரதி பேரன் பெருமிதம்
UPDATED : செப் 10, 2023 12:00 AM
ADDED : செப் 10, 2023 04:39 PM
திருப்பூர்:
பாரதம் என்ற வார்த்தையை மகாகவி பாரதியார், தனது பாடல் மற்றும் கட்டுரையில் அதிகம் பயன்படுத்தியுள்ளார் என மகாகவி பாரதியாரின் பேரன் நிரஞ்சன் பாரதி தெரிவித்தார்.மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியின் மகன் நிரஞ்சன் பாரதி நமது நிருபரிடம் கூறியதாவது:
பாரதியார், பிறப்பில் தமிழனாக இருந்தாலும், தேசத்தின் மீது பற்றும், பாசமும் நிரம்ப வைத்திருந்தார். அதனால் தான், பாரத தேசம் என்ற வார்த்தையை தனது பாடல், கட்டுரைகளில் அதிகளவில் பயன்படுத்தினார். பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் என தனது பாடல் வரியில் சுட்டிக்காட்டியுள்ளார். அதை மெய்ப்பிக்கும் வகையில், இந்தியா என்பதை பாரத் என மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.தமிழ் பேசும் இந்தியனாக தான், பாரதி வாழ்ந்திருக்கிறார். அரசின் இந்த முன்னெடுப்பில் பாரதியை தொடர்புபடுத்தி, அவரின் பாரதம் என்ற வார்த்தை தாங்கிய பாடல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. தான் வாழ்ந்த காலத்திலேயே, அடுத்த நுாறாண்டு காலத்தில் நம்நாடு எப்படி இருக்கும் என, கணித்தவர் பாரதி. பாரதம் என்பது புதிய பெயர் அல்ல; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பாரத கண்டம் என்று தான், நம் நாடு அழைக்கப்பட்டிருக்கிறது.ஒரு கால கட்டத்தில், இந்திய துணைக் கண்டம் நாவலன் தீவு எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். நேற்று டில்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில், பிரதமர் அமர்ந்திருந்த மேஜை முன், பாரத் என்ற பெயரிலேயே நம் நாட்டின் பெயரை குறிப்பிட்டு பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.
