காலாண்டுத் தேர்வு வினாத்தாள்: கட்டணம் வசூலிப்பால் குழப்பம்
காலாண்டுத் தேர்வு வினாத்தாள்: கட்டணம் வசூலிப்பால் குழப்பம்
UPDATED : செப் 11, 2023 12:00 AM
ADDED : செப் 11, 2023 04:59 PM
மதுரை:
தமிழகத்தில் ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் மதுரை உட்பட பல மாவட்டங்களில், மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்க மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட வினாத்தாளில் பாடப் புத்தகங்களில் உள்ள வினாக்கள் மட்டும் இடம் பெறுகிறது. இதுதொடர்பாக கற்றல் நிலை குறித்து ஆய்வு செய்த கல்வித்துறை, காலாண்டு அரையாண்டு தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் முறை பின்பற்ற உத்தரவிட்டது. இதன்படி பள்ளிகளுக்கு இ மெயிலில் பொது வினாத்தாள் பிடிஎப் பைலாக அனுப்பி, அதை பிரின்ட் எடுத்து மாணவருக்கு வழங்க பிரின்டர்களும், பேப்பர் கொள்முதல் செய்ய நிதியும் கல்வித்துறை ஒதுக்கீடு செய்தது. இதன்மூலம் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தந்த மாவட்டமே வினாத்தாள் தயாரிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் 6, 7, 8 வகுப்புகளுக்கு மாணவர்களிடம் தலா ரூ.60, ஒன்பது, 10ம் வகுப்புக்கு ரூ.80, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு ரூ.100 என கட்டணம் வசூலிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் மாவட்ட வினாத்தாள் முறை பின்பற்றப்படலாம் என, மதுரை உட்பட பல மாவட்டங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது பொது வினாத்தாள் தான் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குழப்பத்தை ஏற்பட்டுள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது:
செப்., 15 ல் தேர்வு துவங்கும் நிலையில் வினாத்தாள் தயாரிப்பு குறித்து உறுதியான தகவல் தெரிவிக்கப்படவில்லை. பல மாவட்டங்களில் தேர்வுக்கான காலஅட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பொது வினாத்தாள் முறை என கூறுகின்றனர்.பொது வினாத்தாள் பின்பற்றினால் மாணவரிடம் வசூலித்த வினாத்தாள் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
