40 லட்சம் பள்ளி மாணவியருக்கு சானிட்டரி நாப்கின் வழங்க திட்டம்
40 லட்சம் பள்ளி மாணவியருக்கு சானிட்டரி நாப்கின் வழங்க திட்டம்
UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 09:37 AM
தட்சிண கன்னடா:
கர்நாடகாவின் அரசு மேல்நிலைப் பள்ளிகள், கல்லுாரிகளில் படிக்கும் 40 லட்சம் மாணவியருக்கு, சானிட்டரி நாப்கின் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என மாநில சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் பெண் குழந்தைகளுக்கு, சுசி நன்ன மைத்ரி வழங்கும் திட்டத்தின் கீழ், மாதவிடாய் கப் வழங்கும் நிகழ்ச்சியை, நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைத்தார்.பின், அவர் பேசியதாவது:
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். சிலர் கல்லுாரிக்குச் செல்லத் தயங்குகின்றனர். இதைத் தவிர்க்க, 2013 - 14ல், சித்தராமையா தலைமையிலான அரசு, அரசு பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தைத் துவக்கியது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தால், லட்சக்கணக்கான மாணவியர் பயனடைந்தனர். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இத்திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.மீண்டும் இத்திட்டத்தைத் துவக்கி உள்ளோம். இதற்காக, மாநிலத்தின் நான்கு மண்டலங்களிலும் தனித்தனியாக டெண்டர் அழைத்துள்ளோம். அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று, 17 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவியருக்கு இலவச மாதவிடாய் கப் வழங்கும், சுசி நன்னா மைத்ரி திட்டத்தைத் துவக்கி உள்ளது. மாதவிடாய் கப் அணிவதன் மூலம், மாணவியர் மாதவிடாய் நாட்களை கவலையின்றி கழிக்க முடியும்.இந்த, கப்களை ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் மறுசுழற்சி வகையில் பயன்படுத்தலாம். இத்திட்டம் சோதனை முறையில் துவங்கியபோது, மாணவியரின் தாயார்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. விழிப்புணர்வை ஏற்படுத்திய பின், அதன் பலன்களை அவர்கள் நம்புகின்றனர். தட்சிண கன்னடா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் 15,000 மாணவியருக்கு இலவச மாதவிடாய் கப்கள் வழங்கப்படும். படிப்படியாக மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்.மாதவிடாய் நாட்கள் அசுத்தமானது என்ற மூடநம்பிக்கையை மாணவர்கள் விட்டொழிக்க வேண்டும். மாதவிடாய் என்பது இயற்கையான உயிரியல் செயல்முறை. இது தீட்டு அல்ல. இது பற்றியும் வெளிப்படையான விவாதம் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சுசி நன்ன மைத்ரி திட்டத்தை துவக்கி வைத்த, சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ். இடம்: மங்களூரு, தட்சிண கன்னடா.
