UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 04:14 PM
கோவை:
வருவாய்வழி திறனாய்வு தேர்வுக்கு, பள்ளிகளில் வார இறுதி நாட்களில், சிறப்பு பயிற்சி வகுப்பு நடப்பதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.தமிழகம் முழுக்க, மாநில பாடத்திட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும், டிச., மாதம் நடத்தப்படும். ஏழாம் வகுப்பில், 50 சதவீத தேர்ச்சி பெற்றவர்கள், இத்தேர்வு எழுத தகுதியுடையவர்கள். அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 வரை வழங்கப்படுகிறது. இத்தேர்வுக்கு, அறிவிப்பு வெளியான நிலையில், வார இறுதிநாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பல பள்ளிகளில் தேர்வு சிலபஸ், பழைய வினாத்தாள் அடிப்படையில் வகுப்பு கையாள்வதோடு, மாதிரி தேர்வும் நடத்தப்படுகிறது. ஸ்மார்ட் வகுப்பறையில் மாணவர்களுக்கு புரியும் வகையில், பாடத்திட்ட வீடியோக்களும் திரையிடப்படுகின்றன.மாவட்ட அளவில், தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்க தாமதம் ஆவதால், பள்ளிகளிலே பயிற்சி துவங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.மசக்காளிபாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை மைதிலி கூறுகையில்,நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு என்பதால், கூடுதல் கவனம் செலுத்தி சொல்லித்தருகிறோம். ஆண்டுதோறும் எங்கள் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் முன்னிலை பெறுகின்றனர். தற்போது, 23 மாணவர்கள் தேர்வுக்கு பயிற்சி பெறுகின்றனர். சனிக்கிழமை தோறும் பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதேபோல் பல பள்ளிகள், திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன, என்றார்.
