UPDATED : செப் 13, 2023 12:00 AM
ADDED : செப் 13, 2023 09:50 AM
மதுரை:
சொந்த ஊரின் சுற்றுலா சிறப்பு மிக்க இடங்களையும் பெருமையையும் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் தமிழக அரசு கொண்டு சென்றால் தான் சுற்றுலாத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தமுடியும்.வடமாநிலத்தவர்கள் தமிழகத்தை கலாச்சாரத்தின் பொக்கிஷமாக நினைத்து சுற்றுலா வருகின்றனர். சமீபத்தில் உருவாக்கப்பட்ட கீழடி மியூசியமும் மதுரை கலைஞர் நுாலகமும் புது சுற்றுலா தலமாக மாறிவருகிறது.வெளிநாட்டு, வெளிமாநில பயணிகள் விமானத்தில் இருந்தும் ரயிலில் இருந்தும் இறங்கியவுடன் தமிழகத்தின் விசிட்டிங் கார்டாக பயணிகள் பார்ப்பது கார், டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களை தான். அவர்கள் மூலம் தமிழகத்தின் மதிப்பும், மரியாதையும் பெருமையும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இதற்காக அனைத்து டிரைவர்களுக்கும் பயணிகளை அணுகும் விதம், நடத்தும் விதம், எளியமுறையில் ஹிந்தி, ஆங்கிலத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகளை பேசும் முறையை சுற்றுலாத்துறை மூலம் கற்றுத்தர வேண்டும்.சொந்த ஊர் பெருமை தெரியணும்பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்களது சொந்த ஊரில் உள்ள சிறப்புகளை கூட தெரிந்திருப்பதில்லை. உள்ளூரின் பெருமைகளை அறிந்தால் அதை நேசித்து குப்பையின்றி சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இதை 10 வயதில் இருந்தே பள்ளிப்பருவத்தில் விழிப்புணர்வு பாடமாக கற்றுத்தர வேண்டும்.ஏற்கனவே உள்ள பாரம்பரிய கோயில், அரண்மனைகளில் புதிதாக எதையும் உருவாக்க முடியாது. ஆனால் அந்த இடங்களுக்கு செல்வதற்கான ரோடுவசதி, போக்குவரத்து வசதி, சுகாதாரமான சூழலை அதிகரித்து பயணிகளை ஈர்க்கலாம். மாணவர்கள் உள்ளூர்,வெளியூர் சுற்றுலா செல்ல கல்வித்துறை ஊக்குவிக்க வேண்டும்.மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் புனரமைப்பு பணிகளுக்கு என்று ஏகப்பட்ட நிதி வழங்கப்படுகிறது. கேரளாவில் கட்சிகளுக்குள் பேதமிருந்தாலும் மாநிலம் என்று வரும் போது அனைத்து எம்.பி.,க்களும் டில்லியில் ஒன்றாக முகாமிட்டு மாநிலத்திற்கு தேவையான நிதியை பெற்று வளர்ச்சிக்கு உதவுகின்றனர்.தமிழகத்தில் 39 எம்.பி.,க்கள் உள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாரம்பரிய, பழமையை கொண்டாடும் சுற்றுலா இடங்கள், இளைஞர்களை உற்சாகப்படுத்தும் அருவி, நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இவற்றை புதுப்பிக்கவும், சீரமைக்கவும் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை ஒட்டுமொத்த எம்.பி.,க்களும் ஒன்றுகூடி பெற்று தமிழக சுற்றுலாத்துறையை உலகளவில் உயர்த்த வேண்டும்.
