விரைவில் 600 மாதிரி பள்ளிகள் திறப்பு அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
விரைவில் 600 மாதிரி பள்ளிகள் திறப்பு அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
UPDATED : செப் 14, 2023 12:00 AM
ADDED : செப் 14, 2023 06:38 PM
ஷிவமொகா:
மாநிலத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில், கர்நாடக பப்ளிக் பள்ளிகள் போன்று, 500 முதல் 600 பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளோம் என மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.ஷிவமொகாவில், நேற்று மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:
மாநிலத்தின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கு ஒன்று வீதம், கர்நாடக பப்ளிக் பள்ளிகளை போன்று, மாதிரி பள்ளிகளைத் திறந்து, கன்னடம், ஆங்கில வழிக் கல்வி வழங்க அரசு ஆலோசிக்கிறது. பள்ளிகளுக்கு வர முடியாத நிலையில் உள்ள மாணவர்களை, வகுப்புகளுக்கு அழைத்து வரவும், வகுப்பு முடிந்த பின் மீண்டும் வீட்டில் விடவும் ஏற்பாடு செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கு உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு பெறப்படும்.கல்வி பெறுவதில் இருந்து, சிறார்கள் வஞ்சிக்கப்பட கூடாது என்பது, அரசின் நோக்கமாகும். அரசின் முயற்சியின் பலனாக, பி.யூ.சி., இரண்டாம் ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, இரண்டாவது முறை துணைத் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. தேர்வுக்கு ஆஜரான, 1 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்களில், 41,000 பேர் தேர்ச்சி பெற்றனர். நடப்பாண்டு, ஒரே மாதத்தில் 30,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை இடம் மாற்றி உத்தரவிட்டது, வரலாற்று முடிவாகும்.பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு காண, 43 ஆயிரம் கவுரவ ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் நியமனத்தில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன உத்தரவு கடிதம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
