பிளஸ் 2வில் சனாதன தர்மம்: புத்தகங்களை ஆய்வு செய்ய குழு
பிளஸ் 2வில் சனாதன தர்மம்: புத்தகங்களை ஆய்வு செய்ய குழு
UPDATED : செப் 15, 2023 12:00 AM
ADDED : செப் 15, 2023 10:06 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாடு, தேசிய அளவில், அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசிய விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கிடையில், சனாதனம் என்றால் நிலையான அறம் என்ற பொருளில், பிளஸ் 2 பாட புத்தகத்தில் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இந்திய அறிவியலும், பண்பாடும் என்ற, அந்த பாடபுத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகளை, சமூக வலைதளங்களில் பா.ஜ.,வினர் பரப்பி வருகின்றனர். இதை தொடர்ந்து, பாட புத்தகத்தில் அரசியல் மற்றும் மத ரீதியாக உள்ள கருத்துக்களை, பாடங்களை ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வியில் குழு அமைக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வியின் அங்கமாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தான், பாடத்திட்டம் தயாரித்தல், பயிற்சி அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், பாட வாரியாக ஆய்வு செய்து, பாட புத்தகத்தில் சர்ச்சையான கருத்துக்கள் இருந்தால், அவற்றை கண்டறிய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.அந்த கருத்துகளை தொகுத்து, அரசுக்கு அறிக்கையாக அளிக்கவும், அதன்பின், உரிய மாற்றங்கள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
