2 பள்ளிகளுக்கு ஒரே தலைமை ஆசிரியர்! மாணவர் கல்வி பாதிக்கும் அவலம்
2 பள்ளிகளுக்கு ஒரே தலைமை ஆசிரியர்! மாணவர் கல்வி பாதிக்கும் அவலம்
UPDATED : செப் 15, 2023 12:00 AM
ADDED : செப் 15, 2023 04:46 PM
திருப்பூர்:
இரண்டு பள்ளிகளுக்கு ஒரே தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதால், மாணவர் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பைசல் ராஜா மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.அம்மனுவில் கூறியிருப்பதாவது:
மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,346 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியர், கூடுதல் பொறுப்பாக உடுமலையில் உள்ள மற்றொரு பள்ளியை கவனித்து வருகிறார். வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே, மங்கலம் பள்ளியில் பணிபுரிகிறார். தலைமை ஆசிரியர் இல்லாததால், இப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களும் முறையாக வகுப்பு நடத்துவதில்லை.கல்வித்துறை சார்பில் நடைபெறும் கலை இலக்கியம், விளையாட்டு உள்பட எந்த போட்டிகளிலும் மாணவர்களை பங்கேற்கச் செய்வதில்லை. நான்கு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் இருந்தும்கூட, 12 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால், எந்த ஒரு விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்க முடிவதில்லை.இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த பயனுமில்லை. மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உடனடியாக முழுநேர தலைமை ஆசிரியர்; மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்து, மாணவர்களை விளையாட்டிலும் சாதிக்கச் செய்யவேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
