UPDATED : செப் 15, 2023 12:00 AM
ADDED : செப் 15, 2023 04:49 PM
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், ஆடை வடிமைப்பு மற்றும் பேஷன் பாடம் பயில்வோருக்கான தையல் இயந்திரம் பழுதாகியிருப்பதால், பாடம் பயிற்றுவிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற புகார் எழுந்துள்ளது.திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி முன்னாள் மாணவர் வக்கீல் சங்கர் வைத்தியநாதன், கோவை, கல்லுாரி மண்டல இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:
திருப்பூரிலுள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், பி.எஸ்.சி., காஸ்டியூம் டிசைன் மற்றும் பேஷன் பாட பிரிவில், 150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு செய்முறை பாடங்களை கற்றுத்தர, 50 தையல் மிஷின்கள் உள்ளன; இவற்றில், 10 தையல் இயந்திரங்கள் தான் நல்ல நிலையில் உள்ளது.இவற்றை மாணவ, மாணவியர் சுழற்சி முறையில் பயன்படுத்தி வருவதால், குறைந்த நேரமே கற்கும் சூழல் உருவாகியிருக்கிறது; சிலருக்கு அந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை. இதனால், செயல்முறை பாட திட்டங்களை சரிவர கற்க முடியாத நிலையுள்ளது.வரும் 20ம் தேதி உள்வளாக தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், பொருளாதார நிலையில் வசதியாக உள்ள மாணவ, மாணவியர் வெளியில் கட்டணம் செலுத்தி சொந்த முயற்சியில் பாடம் பயின்றுக் கொள்கின்றனர். ஆனால் ஏழை, எளிய மாணவ மாணவியருக்கு இது சாத்தியமில்லை. எனவே கல்லுாரியில் உள்ள அனைத்து தையல் இயந்திரங்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.
