UPDATED : செப் 18, 2023 12:00 AM
ADDED : செப் 18, 2023 06:24 PM
ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துடுச்சாம்... இது, நீண்ட காலமாக பேச்சுப்பொருளாக இருக்கும் நிலையில், இதனால், பூமிக்கு எத்தனை பெரிய இடையூறு ஏற்படப்போகிறது என்பதை பலரும் உணரவில்லை என்பதுதான் வருத்தம் தரும் உண்மை.வளிமண்டலத்தை சூழ்ந்துள்ள மிக மெல்லிய படலமான ஓசோன், சூரியனின் புற ஊதா ஒளி வீச்சை, உட்கிரகித்து, அதன் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கிறது என்பதுதான் இதன் சுருக்கம். ஓசோனில் விழும் ஓட்டையால், புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் மட்டுமின்றி, கேன்சர், பார்வை குறைபாடு உள்ளிட்டவை மனிதர்களை தாக்கும் என, எச்சரிக்கிறது அறிவியல். நேற்று, உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதை தடுக்க, பூமியில் இருந்து வெளியேற்றப்படும் குளோரோபுளோரோ கார்பன், ஹைட்ரோபுளோரோ கார்பன் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.இந்த அறிவியலை, மாணவர்கள் மிக எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லுாரி பி.காம்., துறை தலைவர் செல்வதரங்கிணி முயற்சியில், கூகுள் ஷீட் வாயிலாக, ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டு, மாணவ, மாணவியர், ஆன்லைன் வாயிலாகவே பதில் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அறிவியல் உண்மையை மிக எளிதாக உணர்ந்து கொண்ட மாணவர்கள், ஓசோன் படலத்தை பாதுகாப்பதில் தங்களுக்குள்ள பொறுப்பையும் உணர்ந்தனர்; அதை தங்களின் கருத்தாகவும் பதிவு செய்தனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், கல்வி கற்றலும் எளிது.
