பள்ளி கல்வி கட்டணம்: மனுக்கள் ‘பெஞ்ச்’க்கு மாற்றம்
பள்ளி கல்வி கட்டணம்: மனுக்கள் ‘பெஞ்ச்’க்கு மாற்றம்
UPDATED : ஜன 21, 2010 12:00 AM
ADDED : ஜன 21, 2010 12:37 PM
சென்னை: தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயிக்க வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், ‘பெஞ்ச்’ விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தமிழக அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பள்ளிகளிடம் இருந்து பல்வேறு விவரங்களை இந்த கமிட்டி கோரியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி சிவஞானம் முன் ஜன. 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சீனியர் வக்கீல்கள் வாதாடினர். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், ‘ஏற்கனவே இதுபோன்று தாக்கல் செய்த ஒரு மனு, தலைமை நீதிபதி அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன் விசாரணையில் உள்ளது. சட்டத்துக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
இதையடுத்து, இந்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, ‘பெஞ்ச்’ முன் விசாரணையில் இருப்பதால், இந்த மனுக்களையும், ‘பெஞ்ச்’ விசாரணைக்கு அனுப்புவதாக நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.
