UPDATED : ஜன 21, 2010 12:00 AM
ADDED : ஜன 21, 2010 12:48 PM
நாடு முழுவதும், 44 நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு, இரண்டு லட்சம் மாணவர்கள் மற்றும் பல்கலைகளின் நிர்வாகிகள் மத்தியில், மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்னையில், நிகர்நிலைப் பல்கலைகளின் மீது மட்டுமே குற்றம் சாட்டுவது சரியல்ல; மத்திய அரசின் பொறுப்பற்ற செயல்பாடும் முக்கியக் காரணமாக இருக்கிறது. உயர்கல்வியை பொறுத்தவரை, கல்வி நிறுவனங்களை நடத்துவதற்காக ஏராளமான விதி முறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், அந்நிறுவனத்தின் பல்வேறு படிப்புகளுக்கான மொத்த இடங்களை நிர்ணயித்தல், கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகளை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் பல்வேறு அமைப்புகள் தான் செய்கின்றன.
நிகர்நிலைப் பல்கலையை துவக்குவதற்குரிய பணிகளை பூர்த்தி செய்தபின், மத்திய அரசின் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பங்களை சரிபார்த்த உடன், மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி விடுவதில்லை. அதிகாரிகள் குழுவை நேரடியாக அனுப்பி, விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் உண்மைதானா என்பது குறித்து ஆய்வு செய்யச் சொல்கிறது.
மத்திய அரசின் விதிமுறைகள்படி, கல்வி நிறுவனம் அமைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து, உறுதி செய்யும் பொறுப்பு, ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு இருக்கிறது. இதை எத்தனை அதிகாரிகள் முழுமையாக நிறைவேற்றுகின்றனர்? கல்வி நிறுவனங்கள் ஒருசில விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் இருந்தால், அதற்கேற்ப பேரம் பேசி லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு, ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்று, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கின்றனர். அதன்பின், மத்திய அரசும் அங்கீகாரத்தை வழங்கி விடுகிறது.
அதேபோல், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களை விட கூடுதல் இடங்களை நிரப்பினால், அதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசிற்கு இருக்கிறது. இதையும், சரிவர கண்காணிப்பதில்லை. அப்படியே, கண்காணித்து முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தால், சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதிகாரிகளே லஞ்சம் வாங்கிக் கொண்டு, கல்வி நிறுவனங்கள் தவறான பாதையில் பயணிக்க ஊக்குவிக்கின்றனர்.
அங்கீகாரம் வழங்குதல், கல்வி நிறுவனங்களின் இதர செயல்பாடுகளை கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் குழுவினர், தங்களது பணியை சரியாக செய்கின்றனரா என்பதை, மத்திய அரசு எப்படி உறுதி செய்கிறது, இதற்காக, ஏதாவது உயர் மட்ட குழுக்கள் இருக்கிறதா என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
மத்திய அரசும், அதிகாரிகளும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து, ஆரம்பத்திலேயே தங்களது பணியை சரிவர செய்திருந்தால், இன்று 44 நிகர்நிலைப் பல்கலைகள் பிரச்னைக்குள் சிக்கியிருக்காது. மத்திய அரசும், அதிகாரிகளுமே, தவறான செயல்களை ஊக்கப்படுத்திவிட்டு, இப்போது திடீரென எல்லா குறைகளையும் கண்டுபிடித்திருப்பது, வேடிக்கையாகவும், விந்தையாகவும் இருப்பதாக கல்வியாளர்கள் வேதனைப்படுகின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டில் இப்போது பல குறைகளை சுட்டிக்காட்டியிருக்கும் மத்திய அரசுக்கு, அங்கீகாரம் வழங்கியபோது தெரியாதது ஏன் என்ற கேள்வியும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு, நிகர்நிலைப் பல்கலைகள் மட்டுமில்லாமல், மத்திய அரசும் முக்கியக் காரணமாக இருப்பது, வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மொத்தத்தில், மத்திய அரசும், அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிகர்நிலைப் பல்கலைகளின் நிர்வாகமும் சேர்ந்து, அப்பாவி மாணவர்கள் இரண்டு லட்சம் பேரின் கல்வியை கேள்விக்குறியாக்கி விட்டன.
இதை ஒரு படிப்பினையாக ஏற்று, வரும் காலங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கும்போதே, அரசின் விதிமுறைகள் 100 சதவீதம் அளவிற்கு கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதை, பல்வேறு உயர் மட்ட குழுக்களின் மூலம் உறுதி செய்தபிறகே, அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை, மத்திய அரசு எடுக்க வேண்டும்.
