UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 08, 2023 08:48 AM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி வட்டாரத்தில், அட்மா திட்டத்தில், விருப்பச்சந்திரம் பகுதி விவசாயிகளுக்கு அங்கக வேளாண் விளக்க தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் சிவநதி பயிற்சியை துவக்கி வைத்து, அங்கக வேளாண்மை மற்றும் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். வேளாண் அலுவலர் சாந்தி, கோடை உழவின் பயன்கள், மண் மாதிரி எடுத்தல், விதை நேர்த்தி பயன்கள், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், ராகி வரிசை நடவு முறை குறித்து எடுத்துரைத்தார். ஒன்றியக் குழு ஒருங்கிணைப்பாளர் திருப்பதி, இயற்கை விவசாயம், பஞ்சகாவ்யா தயாரித்தல், பூச்சி விரட்டி, அசோலா பயன்கள், மண்புழு உரம் தயாரித்தல், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.உதவி வேளாண் அலுவலர் சுப்பிரமணி, சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள் குறித்தும், இயற்கை விவசாயி பாண்டுரங்கன், மீன் அமிலம் மற்றும் இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.
