UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 08, 2023 09:16 AM
கள்ளக்குறிச்சி:
கனியாமூர் தனியார் பள்ளியில் மாத வாடகை அடிப்படையில், கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கி 24 மாதங்களுக்கு மேலாகும் நிலையில் இதுவரை ஒரு மாத வாடகை கூட செலுத்தாத அவலம் உள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் சொந்த கட்டடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டது. இக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் என 7 இளங்கலை பாடப்பிரிவுகளும், எம்.ஏ., ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி., கணிதம், கணினிஅறிவியல் என 4 முதுகலை பாடப்பிரிவுகளும் உள்ளன. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இக்கல்லுாரியில் பயிலுகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென புதிய மருத்துவகல்லுாரி மருத்துவமனை அறிவிக்கப்பட்டது.கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அரசு கலைக்கல்லுாரி கட்டடம் தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்டது. தொடர்ந்து, மருத்துவகல்லுாரி மருத்துவமனை கட்டுவதற்காக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகள் முழு வீச்சில் தொடங்கியது.இதனையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தற்காலிகமாக குதிரைச்சந்தல் அரசுப்பள்ளிக்கும், அங்கிருந்து ஏமப்பேர் உயர்நிலைப்பள்ளிக்கும் மாற்றப்பட்டது. அங்கு ஏற்கனவே நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் இருப்பதால், போதிய வகுப்பறைகள், கழிவறை, ஆய்வகம், நுாலகம் இல்லாமல் கல்லுாரி மாணவர்கள் சிரமமடைந்தனர்.இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக கூறி, கல்லுாரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன், அப்போதைய கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட அதிகாரிகள், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி கட்டடத்திற்கு தற்காலிகமாக அரசு கல்லுாரியை இடமாற்றம் செய்தனர். இதற்கிடையே, கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிரந்தரமாக செயல்பட, சடையம்பட்டு கோமுகி ஆற்றுக்கு அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கனியாமூர் தனியார் பள்ளி வளாகம் மற்றும் கட்டடங்களை ஆய்வு செய்து, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் முதல் 2024 அக்டோபர் வரை, 3 வருட காலத்திற்கு பயன்படுத்தி கொள்ளவும், மாத வாடகையாக ரூ.82 ஆயிரத்து 400 வழங்கலாம் எனவும் நிர்ணயித்தனர்.இதற்கு தனியார் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தினர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, கடந்த 2021 அக்., முதல் கனியாமூரில் அரசு கல்லுாரி தற்காலிகமாக செயல்பட தொடங்கியது. கல்லுாரி செயல்பட தொடங்கி 24 மாதங்களுக்கு மேலாகும் நிலையில், இதுவரை ஒரு மாத வாடகை பணம் கூட தரப்படவில்லை. இது குறித்து மனு அளித்தும் உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை என அறக்கட்டளை தரப்பினர் புலம்புகின்றனர்.
