வாக்குறுதி அளித்த முதல்வர் ஆசிரியர்களை கைது செய்வதா?
வாக்குறுதி அளித்த முதல்வர் ஆசிரியர்களை கைது செய்வதா?
UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 08, 2023 05:18 PM
திருமங்கலம்:
கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றாமல் அதற்காக போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளை எட்டி உதைத்தால் வெகு விரைவில் தி.மு.க., ஆட்சியை மக்கள் துாக்கி எறிந்து விடுவார்கள் என மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேயநத்தத்தில் குலதெய்வம் வீரம்மாள் கோயிலில் தரிசனம் செய்த தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் குலதெய்வமான வீரம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம் ஆகஸ்டில் நடந்தது. நேற்று 48 ம் நாள் மண்டல பூஜை நடந்தது.இதில் பங்கேற்ற தே.மு.தி.க.,பொருளாளர் பிரேமலதா கூறியதாவது:
காவிரி பிரச்னை தொடர்பாக முதன் முதலாக தஞ்சாவூருக்கு சென்று போராட்டம் நடத்தியது தே.மு.தி.க., தான். தொடர்ந்து விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவதால் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதனை நிறைவேற்றாமல் தங்கள் உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்துள்ளனர்.டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பியதற்காக விவசாயி தாக்கப்பட்டது வேதனை அளிக்கக்கூடிய விஷயம். விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். அவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். விவசாயிகளுக்கு இந்த அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். விவசாயிகளை எட்டி உதைத்தால் வெகு விரைவில் உங்களை துாக்கி எறிய மக்கள் தயாராகி விடுவார்கள் என்றார்.
