UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 09, 2023 09:14 AM
சிதம்பரம்:
மக்கள் நலனுக்காக, பல்வேறு சாதனைகளை புரிந்தவர் டி.வி.ராமசுப்பையர் என பேராசிரியர் ஞானகுமார் பேசினார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தநாள் விழா, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கால்நடை பண்ணைக்கு தீவனம், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.சிதம்பரம் மாரியப்பா நகர் அன்பகம் முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இல்ல நிர்வாகி சுகுமார் தலைமை தாங்கினார். டாக்டர் அர்ச்சுணன் முன்னிலை வகித்தார். அண்ணாமலை பல்கலை., பேராசிரியர் ஞானக்குமார், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் மாவட்ட தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து, பல்கலைக்கழக கால்நடை பண்ணைக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாட்டுத்தீவனம் வழங்கினார். முன்னதாக, தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்.ராமசுப்பையர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.விழாவில், நீராதரம் மற்றும் மேலாண்மை என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வழங்கி, பேராசிரியர் ஞானகுமார் பேசியதாவது:
காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட டி.வி.ராமசுப்பையர், அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டாற்றினார். திருவாங்கூரில் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வரச் செய்தார். தமிழர்கள் நலனுக்காக, தினமலர் நாளிதழை 1951 ல் தொடங்கி மக்கள் சேவையில் ஈடுபட்டார்.திருவனந்தபுரம்-குமரி - திருநெல்வேலி இடையே ரயில் சேவையை வலியுறுத்தி தொடர் கட்டுரைகளை வெளியிட்டு ரயில் பாதை அமைப்பு தலைவராகவும் செயல்பட்டு வெற்றி கண்டார். சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். ஆடம்பரம், விளம்பரம் இல்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தினார். குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார் என்றால் மிகையாகாது.தமிழ் மக்களின் பிரச்னைகள் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தொலைநோக்கு சிந்தனையாளராக செயலாற்றினார். மாணவ மாணவியரின் கல்வி அறிவை மேம்படுத்த அரசு பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி வினா விடை பகுதியை தொடங்கினார். தேசிய மாமனி பட்டம் உள்ளிட்ட பல கவுரவங்களை பெற்றவர். தமிழ் மற்றும் தமிழரின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் டி.வி.ஆர்.,இவ்வாறு பேராசிரியர் ஞானகுமார் பேசினார்.கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.
