UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 09, 2023 09:15 AM
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.நான் முதல்வன் திட்டம் வழியே பயிற்சி பெற்று, பல்வேறு நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ள, 1,200 மாணவ - மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்தது. பணி நியமன ஆணைகளை, அமைச்சர் உதயநிதி வழங்கினார்.விழாவில், டி.சி.எஸ்., ஐகான், ஐ.ஐ.டி., பிரவார்டாக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், கோககோலா போன்ற முன்னணி நிறுவனங்களுக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே, உயர்கல்வி வழிகாட்டுதல், ஆங்கில மொழித்திறன் வளர்த்தல், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், திறன் பயிற்சி வழங்குதல் ஆகியவற்றுக்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.கேம்பிரிட்ஜ் நிறுவனத்தால், மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் கற்றலுக்கென, பிரத்யேகமாக மொபைல் போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் சுப்பிரமணியன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
