UPDATED : அக் 09, 2023 12:00 AM
ADDED : அக் 09, 2023 01:35 PM
மருத்துவ குணமும் தனித்துவமான இனிப்பு சுவையும் கொண்ட உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி பனங்கருப்பட்டிருக்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரி உடன்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 15 சொசைட்டிகள் இணைந்து, மத்திய அரசுக்கு விண்ணப்பித்தன.சென்னையில் இயங்கிவரும் மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிவகம், பனங்கருப்பட்டியின் பல விதமான சிறப்புகளை பரிசீலித்து இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதற்காக தரப்பட்ட பல்வேறு தரவுகளும் இதில் ஆய்வு செய்யப்பட்டன. துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தேரிக்காடு என்ற பகுதியிலுள்ள செந்நிறம் கொண்ட மண்ணில் உள்ள பனை மரங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.இந்த பனை மரங்களில் உட்புறம் கிளிஞ்சல் சுண்ணாம்பு பூசப்படும் மண் கலயங்கள் கட்டி இயற்கையான இனிப்பு சுவையுள்ள- சுக்ரோஸ் துாய்மையான பதநீர் பெறப்படுகிறது.அதிலிருந்து பனங்கருப்பட்டி தயாரிக்கப்படுவதால், அதிக இனிப்பும் குளிர்ச்சி தரும் இயற்கையான மருத்துவக் குணமும் அதில் உள்ளது; அங்குள்ள வறட்சியான சூழல் பனங்கருப்பட்டியை சேமிக்கவும் உதவுகிறது.பதநீர் சேகரிக்கப் பயன்படும் மண் கலயங்களின் உள்ளே பூசப்படும் கிளிஞ்சல் சுண்ணாம்பு கடற்கரை ஓரங்களில் சேகரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து நுண்ணுாட்டச்சத்து மற்றும் தாதுப் பொருட்கள் அதில் நிறைந்துள்ளன. மற்ற பகுதிகளில் தயாரிக்கும் கருப்பட்டிகளுக்கு, பாறைகளில் இருந்து பெறப்படும் எரிக்கப்பட்ட சுண்ணாம்பு மட்டுமே பயன்படுத்தப்படுவதால் களிமண் இருக்கும் வாய்ப்புண்டு.உடன்குடி கருப்பட்டி தயாரிப்புக்கு பிறகு பனை ஓலைகளால் ஆன கொட்டான்களில் அடைக்கப்படுவதால்அதற்கென்று தனி மணம் கிடைக்கிறது. இது போன்ற பல காரணங்களுடன் கூடிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருப்பதால், புவி சார் குறியீடு நிபுணர் ரவி சாமி தெரிவித்தார்.-நமது நிருபர் -
