அமெரிக்க பேராசிரியைக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
அமெரிக்க பேராசிரியைக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 08:31 AM
ஸ்டாக்ஹோம்:
வேலைவாய்ப்பு சந்தைகளில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்த, அமெரிக்க பேராசிரியை கிளாடியா கோல்டின், இந்தாண்டுக்கான பொருளாதார நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக, நோபல் பரிசு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. தங்கப்பதக்கத்தால் ஆன நோபல் பரிசுடன், 8 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும் அளிக்கப்படுகிறது.ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிச., 10ம் தேதி, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடக்கும் நிகழ்ச்சியில் பரிசுகள் அளிக்கப்படுகின்றன.ஆல்பிரட் நோபலின் விருப்பப்படி, அமைதிக்கான பரிசு மட்டும் நார்வே உள்ள ஒஸ்லோவில் வைத்து வழங்கப்படுகிறது.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்டு பல்கலை பேராசிரியை கிளாடியா கோல்டின், ௭௭, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு சந்தையில் பெண்களின் பங்களிப்பு குறித்த ஆய்வுக்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பு சந்தையில் உள்ள பாலின பேதம், பாகுபாடு, இடைவெளி போன்ற பிரச்னைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு காண்பதற்கு அவருடைய ஆய்வு பெரும் உதவியாக இருக்கும் என, விருது குழு தெரிவித்துள்ளது.இதுவரை, 92 பேர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர்; இதில் இருவர் மட்டுமே பெண்கள்.
