UPDATED : ஜன 23, 2010 12:00 AM
ADDED : ஜன 23, 2010 10:51 AM
இது பற்றி கோவை, நீலகிரி மாவட்டங்களின் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் இளங்கோ கூறியதாவது:
அரசு உத்தரவின்படி கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் தீவிர ஆய்வு நடத்தி வருகிறோம். இது போல் நடந்த ஆய்வில் மூன்று பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளி நடத்துவதற்கான அனுமதி பெறாமலே ‘மெட்ரிக்குலேஷன் பள்ளி’ என பெயர் பலகை வைத்துக் கொண்டு இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பல்லடம்-திருச்சி ரோட்டில் உள்ள முத்து பள்ளி, தொண்டாமுத்தூர் நரசீபுரம் ரோடு புள்ளாக்கவுண்டன்புதூரில் உள்ள லாரல் பள்ளி, நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி ஆகிய இம்மூன்று பள்ளிகளை உடனடியாக மூடிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி ஏழு ஆண்டுகளாக மெட்ரிக் பள்ளி என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அரசு விதிமுறை மீறி செயல்பட்ட இப்பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, அருகில் உள்ள வேறு தனியார் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இளங்கோ கூறினார்.
கோவை புறநகரில் செயல்படும் சில தனியார் பள்ளிகளில் அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது பற்றி கேட்டதற்கு, “காரமடை, அன்னூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்துவதாக தகவல் வந்தது. மே மாதம் வரை மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என அப்பள்ளிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
