அமைச்சர் வருகைக்காக காத்திருக்கும் புதிய பள்ளி கட்டடம்
அமைச்சர் வருகைக்காக காத்திருக்கும் புதிய பள்ளி கட்டடம்
UPDATED : அக் 11, 2023 12:00 AM
ADDED : அக் 11, 2023 09:36 AM
மதுராந்தகம்:
படாளம் பகுதியில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டில், அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி உள்ளது.இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 146 மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் ஓடுகள் கொண்டு கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்த கட்டடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போதுள்ள பள்ளி கட்டடத்தில், மழை காலங்களில் நீர்க்கசிவு இருப்பதால், பள்ளி சார்பில் 20 லட்சம் ரூபாயும், சர்க்கரை ஆலையின் சார்பில், 27 லட்சம் ரூபாய் என, மொத்தம் 47 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.இந்த நிதியில் இருந்து, நான்கு வகுப்பறையுடன் கூடிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, நான்கு மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல், அமைச்சர் வந்து திறப்பதற்காக காத்துக்கிடக்கிறது. பள்ளி கட்டடம் திறப்பு எப்போது என கேட்டறிய, படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அலுவலரை, நேரடியாக சென்று கேட்பதற்கு முயற்சி செய்தபோது அனுமதி மறுக்கப்பட்டது.எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுத்து, பள்ளி கட்டடத்தை விரைந்து திறக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
